16 ஆண்டுகள் ஓடிருச்சு.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் எப்படியோ.. இலங்கை அணிக்கு இங்கிலாந்து அப்படிதான்!
பெங்களூரு: நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

உலகக்கோப்பை தொடரின் 25வது போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்து இலங்கை அணி களமிறங்கியது. இந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் 4 போட்டிகளில் 3 தோல்வி, ஒரு வெற்றி என்று புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் எந்த அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இங்கிலாந்து அணி நிச்சயம் தரமான கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்னொரு பக்கம் 1999ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் இங்கிலாந்து அணியிடம் இலங்கை அணி தோல்வியடைந்ததே இல்லை என்று நிலை இருந்து வருகிறது. இதனால் இங்கிலாந்து அணி வரலாற்றை மாற்றுமா அல்லது இங்கிலாந்து அணி வரலாறு படைக்குமா என்ற கேள்வியுடன் ஆட்டம் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. 45 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்தடுத்து சீட்டு கட்டை போல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சரிந்தனர். அதிரடியாக ரன்கள் சேர்த்த பென் ஸ்டோக்ஸ் மட்டும் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி தரப்பில் குமாரா 3 விக்கெட்டுகளையும், மேத்யூஸ் மற்றும் ரஜிதா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் பெரேரா - நிசாங்கா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அதில் குசல் பெரேரா 4 ரன்களிலும், கேப்டன் குசல் மெண்டிஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழக்க, இலங்கை அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் நிசாங்கா - சமரவிக்ரமா கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இவர்கள் இருவரையும் பிரிக்க இங்கிலாந்து பவுலர்கள் முயன்றும், இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை விளாசி கொண்டே இருந்தனர். இதன் காரணமாக இலங்கை அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த தொடக்க வீரர் நிசாங்கா 83 பந்துகளில் 77 ரன்களையும், சமரவிக்ரம்ரா 54 பந்துகளில் 65 ரன்களையும் சேர்த்தனர்.

இதன் மூலமாக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இலங்கை அணி வீழ்த்தியுள்ளது. அதேபோல் தொடர்ச்சியாக 5 உலகக்கோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


Click it and Unblock the Notifications