மொதல்ல நான் சொல்றது செய்யுங்க..!!. மரத்தில் ஏறி போராடிய கிரிக்கெட் ரசிகர்.. காரணம் இதுதான்..!!
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி ரசிகர் ஒருவர், தமது கோரிக்கையை நிறை வேற்ற கோரி மரத்தில் ஏறி நடத்திய போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.
பொதுவாக விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டவர்களை கொண்ட உலகம் நம்முடையது. ஒரு குறிப்பிட்ட விளையாட்டும் மீது கொண்டிருக்கும் பற்று, வெறி, ஆர்வம் என்று எந்த வார்த்தைகளை வரிசைப்படுத்தி போட்டாலும் சரி... அந்த விளையாட்டை நேசிப்பது போல, அதில் தொடர்புடைய விளையாட்டு வீரர்களை தலையில் தூக்கி வைத்து ஆடும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அந்த குறிப்பிட்ட வீரரை போன்று தம்மை மாற்றி கொள்வது, அவர்கள் அணியும் உடையை போன்றே தேடி பிடித்து வாங்கி மாட்டிக் கொள்வது, உடல் முழுவதும் அவரது உருவத்தை வரைந்து கொள்வது என பல பாணிகளில் ரசிகர்கள் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துவது உண்டு. அவர்களை பற்றிய எந்த செய்தியாக இருந்தாலும் அதை பத்திரப்படுத்துவது என ரசிகர்களில் பல வகையினர் இருக்கின்றனர்.

ரசிகர் பெருமக்களே
ஆனால்... அப்படிப்பட்ட உயிர் ரசிகர்களின் அன்பை, ஆதரவை பொருட் படுத்தாமல் இருப்பவர்களும் உண்டு. சிலர் கண்டுகொள்ளாமல் இருப்பர்... சிலர் கண்டுகொள்வது போலவும், தெரியாதது போலவும் இருப்பர். (இந்த இடத்தில் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர் பெருமக்களே... என்று யாரோ சொல்வது ஞாபகம் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல). அது போன்ற ஒரு ரசிகரின் வேடிக்கையான விளையாட்டு தான் தற்போது டிரெண்டான விஷயமாகி விட்டது.

பாடாய்படுத்தும் கிரிக்கெட்
அதிலும்... தற்போது உலக கோப்பை கிரிக்கெட் சீசன். சொல்லவே வேண்டாம்.. கிரிக்கெட் ஜூரம் ரசிகர்களை போட்டு பாடாய்படுத்துகிறது. பார்ப்பது கிரிக்கெட், பேசுவது கிரிக்கெட் என்று 24 மணி நேரமும் அதை பற்றியே தான் சிந்தனையும் கூட.

வைரல் வீடியோ
ஒவ்வொரு அணிக்கும், தனித்தனி ரசிகர் பட்டாளம். அதில் இலங்கை அணியின் தீவிர ரசிகர் செய்த காரியம் தான் இப்போது ஹைலைட். சமூக வலைதளத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது இதுதான்:
மரத்தில் ஏறிய ரசிகர்
ஒரு பெரிய மரத்தில் ஏறி உட்கார்ந்து கொள்ளும் ரசிகர் ஒருவர் திடீரென சத்தமிடுகிறார். போராட்டத்தில் குதித்த அவர், இலங்கை கிரிக்கெட் அணி மிக மோசமான நிலையில் இருக்கிறது. எனவே உலக கோப்பை தொடரில், திசரா பெரேராவை (ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7வது வீரராக களம் இறங்கினார்) தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க வேண்டும்.

சமாதான பேச்சுவார்த்தை
அப்போது தான் நான் மரத்தை விட்டு கீழே இறங்குவேன். இல்லையெனில் நான் வரமாட்டேன். இது தான் எனது கோரிக்கை என்று ஆவேசமாக கூறினார். தகவல் அறிந்த போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பகுதி மக்களும் அந்த ரசிகரை சமாதானப்படுத்தினர்.
கிண்டல் பதில்
சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த முன்னாள் இலங்கை வீரர் ரசல் அர்னால்டு, ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். பிரமாதம்.... அவனை அப்பிடியே மரத்து மேலேயே உட்கார வைங்க என்று கிண்டலாக அதில் கூறி உள்ளார். அதுவும் வைரலாகி உள்ளது.


Click it and Unblock the Notifications