சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நடுவே நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தோடு கண்டு ரசித்தார்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தோடு கண்டுகளித்தார். அவர் சிஎஸ்கே அணியின் சீருடையான மஞ்சள் நிற சட்டையை அணிந்து கொண்டு, மஞ்சள் கொடியை ஆட்டியபடி இருந்ததை நேரடி ஒளிபரப்பில் பல கோடி ரசிகர்கள் பார்த்தனர்.
ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள், ஸ்டாலினையும், அவரது மனைவி துர்கா ஆகியோரையும் மைதானத்திலுள்ள பிரமாண்ட திரையில் பார்த்த ரசிகர்கள், விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின்போது, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை, தனது வீட்டில் குடும்பத்தோடு அமர்ந்து ஸ்டாலின் கண்டு ரசித்தார் என்பது நினைவிருக்கலாம்.