நீங்க சொன்ன புத்தாண்டு பரிசு இது தானா ? ரசிகர்களை ஏமாற்றிய சூர்யகுமார், சஞ்சு சாம்சன்.. தடுமாற்றம்
மும்பை : இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது இந்திய வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறி வருகின்றனர். டாஸ் வென்ற இலங்கை அணி முதலில பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தாலும், பனிப் பொழிவின் காரணமாக இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு தான் சாதகமாக இருக்கும்.
இதனால் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தால் தான் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அதிரடியாக விளையாட வேண்டிய உத்வேகத்தில் இந்திய வீரர்கள் இருந்தனர்.

முதலில் அதிரடி
இதில் இஷான் கிஷன் எதிர்கொண்ட முதல் ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என 16 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணி ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு காத்திருப்பதாக ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அதன் பிறகு இந்திய அணி சரிவை நோக்கி சென்றது.

சரிந்த விக்கெட்டுகள்
குறிப்பாக அறிமுக போட்டியில் களமிறங்கிய சுப்மான் கில் 7 ரன்களில் மகீஷ் தீக்சனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இலங்கை சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தடுமாறினர். தடுமாறினர் என்று சொல்வதை விட, இலங்கை வீரர்கள் விரித்த வலையில் சிக்கி கொண்டு தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

சூர்யகுமார் அவுட்
கடந்த ஆண்டு அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ், 10 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஒரு பவுண்டரி மட்டுமே விளாசி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். கருணரத்னே வீசிய பந்தை பின்னால் அடிக்க முயன்ற சூர்யகுமார் யாதவ் கேட்ச் ஆனார். இதனால் ஏமாற்றத்துடன் அவர் பெவிலியன் திரும்பினார்.

சஞ்சு சாம்சன் ஏமாற்றம்
இதனையடுத்து ரசிகர்களின் பல எதிர்ப்புக்கு பிறகு சஞ்சு சாம்சனுக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைத்தது. தனஞ்செய்யா டி சில்வா ஓவரை தூக்கி அடிக்க முயன்று, தேவையில்லாத ஷாட் ஆடி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 46 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.


Click it and Unblock the Notifications