சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கோபத்தில் கொந்தளித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் அணுகுமுறையை பற்றி ஒரு வார்த்தையை அந்த பத்திரிக்கையாளர் குறிப்பிட்டார். அதை கேட்டவுடன் ஸ்டீபன் பிளெமிங் கோபத்தில் கொந்தளித்தார்.
ஸ்டீபன் பிளெமிங் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய முக்கிய கருத்துகளை நாம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம். தற்போது அந்த பத்திரிக்கையாளருடன் அவர் கோபமாக பேசியது பற்றி இங்கே பார்க்கலாம். 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அதன் பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கலந்து கொண்டார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் சிஎஸ்கே அணியின் பேட்டிங் அணுகுமுறை பற்றி விமர்சனம் செய்து கேள்வி எழுப்பி இருந்தார். "முதல் போட்டியில் 156 என்ற இலக்கை 20 ஓவர்கள் வரை சென்று சேஸிங் செய்து இருக்கிறீர்கள். இன்றைய போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக 146 ரன்கள் மட்டுமே அடித்து இருக்கிறீர்கள். இதுதான் உங்களின் கிரிக்கெட் ஆடும் வழி என்று எனக்கு தெரியும். ஆனால், இது காலாவதியான முறை என நீங்கள் நினைக்கவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதைக் கேட்டவுடன் கோபமடைந்த ஸ்டீபன் பிளெமிங், "எனது வழியில் ஆடும் முறை என்றால் எதை சொல்கிறீர்கள்?" என்று பொங்கினார். அதன் பின் அவருக்கு பதில் அளித்த ஸ்டீபன் பிளெமிங், "நீங்கள் அதிரடியாக ஆடுவதை பற்றி பேசுகிறீர்கள். எங்கள் அணியில் அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதனால் உங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை."
"நாங்கள் முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாடவில்லை என்பதாலும், அதிர்ஷ்டம் எங்களுக்கு சாதகமாக இல்லை என்பதாலும் இவ்வாறு சொல்கிறீர்கள். ஆனால், யார் வெற்றி பெறுகிறார்கள் என்று முடிவில் பாருங்கள். நாங்கள் நேர்மறையான கிரிக்கெட் விளையாட்டை விளையாடுகிறோம். அதற்காக எங்களை ஒதுக்கி தள்ளிவிட முடியாது" என்றார்.
அதற்கு அந்த பத்திரிக்கையாளர், "நான் உங்களை ஒதுக்கி தள்ளவில்லை" என்றார். அதற்கு மீண்டும் கோபமாக பேசிய ஸ்டீபன் பிளெமிங், "நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள். இது முட்டாள்தனமான கேள்வி" என்றார். இந்த விவாதத்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாட உள்ளது. அந்த போட்டி கௌஹாத்தியில் நாளை நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று இது போன்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா? என பார்க்கலாம்.