கல்லே: ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னணி பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்து இருக்கிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து உலகில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனையை செய்து இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே ஸ்டீவ் ஸ்மித் இந்த பெரிய சாதனை படைத்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த 15வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஸ்டீவ் ஸ்மித் இந்த சாதனையை அடையத் தவறினார். அப்போது 9,999 ரன்கள் எடுத்த நிலையில் இருந்தார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஒரு ரன் எடுத்த போது அவர் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். மேலும், இந்த டெஸ்ட் போட்டியில் அவர் தனது 35வது டெஸ்ட் சதத்தையும் நிறைவு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 104 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இப்போது ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் ரிக்கி பாண்டிங், ஆலன் பார்டர் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோருடன் நான்காவதாக இந்த சாதனையை செய்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார்.
ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்ததன் மூலம் ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் தான் இந்த சாதனையை முதலில் எட்டிய வீரர் ஆவார். ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச போட்டிகளில் 10,000க்கும் அதிகமான டெஸ்ட் ரன்கள், 5000க்கும் அதிகமான ஒருநாள் போட்டிகள் ரன்கள், 1000க்கும் அதிகமான டி20 போட்டிகள் ரன்கள் மற்றும் 50க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் ஆவார்.
ஸ்டீவ் ஸ்மித் 10103* டெஸ்ட் ரன்கள், 5662 ஒருநாள் போட்டி ரன்கள், 1094 டி20 போட்டி ரன்கள் குவித்து, 64 சர்வதேச விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். சங்ககாரா மற்றும் ஜெயவர்தனே போன்ற வீரர்கள் மட்டுமே அவரைப் போல மூன்று வித கிரிக்கெட்டிலும் குறிப்பிட்ட மைல்கல்லை எட்டி உள்ளனர். ஆனால், அவர்களும் 50 விக்கெட்களை வீழ்த்தவில்லை. ஆனால், ஸ்மித் மட்டுமே இந்த நான்கு சாதனைகளையும் செய்த ஒரே கிரிக்கெட் வீரராக இருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் மட்டுமே ஆடி இருந்ததால் அவரால் ஸ்டீவ் ஸ்மித் அடைந்த டி20 மைல்கல்லை எட்ட முடியவில்லை. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இன்னும் 10,000 ரன்களை எட்டவில்லை. மேலும், 50 சர்வதேச விக்கெட்களையும் வீழ்த்தவில்லை. எனவே, அவர்களாலும் ஸ்டீவ் ஸ்மித் சாதனையை செய்ய முடியாத நிலையே உள்ளது.
சச்சின் டெண்டுல்கர் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆவார். அவர் 15921 ரன்கள் எடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து ரிக்கி பாண்டிங், ஜாக்கஸ் காலிஸ், ராகுல் டிராவிட் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் உள்ளனர். அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் 14 வது இடத்தில் இருக்கிறார்.
ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோரின் சதங்களால் ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்து இருக்கிறது. டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவுக்கு அதிரடியான தொடக்கத்தை வழங்கினார், ஆனால் அவர் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்னஸ் லாபுஷேன் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.