BBL: பாபர் அசாமை அசிங்கப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்.. அடுத்த ஓவரில் நடந்த 32 ரன் ருத்ரதாண்டவம்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் (BBL) தொடரில் ஒரு பக்கம் சிக்ஸர்கள் பறக்க, மறுபக்கம் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாபர் ஆசம் இடையே நடந்த ஒரு சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை உற்றுநோக்க வைத்துள்ளது. "சிங்கிள் ஓட மாட்டேன்" என்று ஸ்மித் எடுத்த ஒரு முடிவு, பாபர் ஆசமை மனதளவில் உடைத்ததோடு, அடுத்த ஓவரில் ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருக்கிறது.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) நடைபெற்ற சிட்னி சிக்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான போட்டியில்தான் இந்த உச்சக்கட்ட நாடகம் அரங்கேறியது.

சிட்னி சிக்சர்ஸ் அணி 189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்தது. 11-வது ஓவரின் கடைசி பந்தில் ஸ்டீவ் ஸ்மித் சிங்கிள் ஓட மறுத்துவிட்டார். மறுமுனையில் பாகிஸ்தான் நட்சத்திரம் பாபர் ஆசம் அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். ஸ்மித் ஸ்ட்ரைக்கை தக்கவைத்துக்கொள்ள நினைத்தாலும், பாபர் ஆசமுக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை.
மைதானத்திலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்திய பாபர், ஸ்மித்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் ஸ்மித், "அடுத்த ஓவரை நான் பார்த்துக்கிறேன்" என்பது போல் கூலாக பதில் சொன்னார். ஸ்மித் ஏன் சிங்கிள் ஓடவில்லை என்பது அடுத்த ஓவரில் (12-வது ஓவர்) தான் புரிந்தது. ரியான் ஹேட்லி வீசிய அந்த ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் ருத்ரதாண்டவம் ஆடினார்.
வரிசையாக நான்கு சிக்ஸர்களை அடித்து அந்த ஓவரை துவம்சம் செய்த ஸ்மித், மொத்தம் 32 ரன்களை விளாசினார். பிபிஎல் வரலாற்றிலேயே மிகவும் அதிக ரன்கள் கொடுக்கப்பட்ட ஓவர் இதுதான். ஸ்மித்தின் இந்த அதிரடியால் ஆட்டம் அப்படியே சிக்சர்ஸ் பக்கம் திரும்பியது.
ஸ்மித் இப்படி ஆடியதைக் கண்டு மிரண்டுபோன பாபர் ஆசம், அடுத்த ஓவரிலேயே (13-வது ஓவர்) கவனச்சிதறலால் விக்கெட்டை இழந்தார். நாதன் மெக்ஆண்ட்ரூ பந்துவீச்சில் 47 ரன்களில் (39 பந்து) போல்ட் ஆனார். அரைசதம் அடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் மற்றும் ஸ்மித்தின் செயலால் ஏற்பட்ட விரக்தி என அனைத்தையும் சேர்த்து, பெவிலியன் திரும்பும்போது பேட்டால் பவுண்டரி குஷனை ஓங்கி அடித்துத் தனது கோபத்தை வெளிப்படுத்தினார் பாபர்.
இறுதியில் ஸ்டீவ் ஸ்மித் வெறும் 42 பந்துகளில் 100 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார். சிட்னி சிக்சர்ஸ் அணி 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. "சிங்கிள் வேணாம்" என்று ஸ்மித் சொன்னது சரிதான் எனப் போட்டியில் அவர் நிரூபித்துவிட்டார்.


Click it and Unblock the Notifications