stop clock rule இன்று முதல் கிரிக்கெட்டில் அமலுக்கு வருகிறது..அப்படி என்றால் என்ன? தப்பித்த இந்தியா
மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் இன்று முதல் ஒரு புதிய விதி அமலுக்கு வரப்போகிறது. கிரிக்கெட் போட்டி வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நடத்தப்படுவதற்கு ஐசிசி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. டி20 போட்டி என்றால் முதல் 3:30 மணி நேரத்திற்குள்ளும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் என்றால் ஆறரை முதல் 7 மணி நேரத்தில் முடிக்கவும் ஐசிசி திட்டமிட்டு வருகிறது.
அந்த வகையில் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் Timed out என்று ஒரு விதி இருந்தது ரசிகர்களுக்கு மேத்யூஸ் மூலம் தெரிய வந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிய ஒரு விதியை அமல்படுத்த ஐசிசி முடிவு எடுத்திருக்கிறது.

இதற்கு பெயர் ஸ்டாப் க்ளாக் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது பந்து வீசும் அணி ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை 60 வினாடிக்குள் தொடங்க வேண்டும். இவ்வாறு இரண்டு முறை 60 வினாடிக்குள் அடுத்த ஓவரை தொடங்க முடியவில்லை என்றால் இரண்டு முறை எச்சரிக்கை வழங்கப்படும். அதையும் மீறி மூன்றாவது முறையாக பந்து வீசும் அணி ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் 60 வினாடிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டால் பேட்டிங் செய்யும் அணிக்கு ஐந்து ரன்கள் அபராதமாக வழங்கப்படும்.
இந்தப் புதிய விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. எனினும் இந்த விதியை முதல்முறையாக சோதிக்கும் வகையில் இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதும் முதல் டி20 போட்டிக்கு தான் அமலுக்கு வருகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி 13 ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு தொடங்குகிறது. இதனால் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டிக்கு இந்த ஸ்டாப் க்ளாக் முறை அமலுக்கு வராது.
இதனால் இந்திய அணி வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம். எனினும் இந்த புதிய முறை இந்தியா அடுத்து விளையாடும் போட்டிக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதற்குள் இந்திய அணி வீரர்கள் இந்த புதிய விதி குறித்து தெரிந்து கொண்டு அதற்காக தயார் செய்ய வேண்டும்.
எப்போதும் ஒரு ஓவர் முடிந்து மறு ஓவர் ஆரம்பிக்க பந்து வீசும் அணி அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எந்த பவுலரை பயன்படுத்த போவது, பீல்டர்களை எப்படி நிறுத்துவது என்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதனை விரைவு படுத்த தான் இந்த விதியை ஐசிசி கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications