இந்த பாவமான பாகிஸ்தான் அணியிடம் தோற்றால் இங்கிலாந்துக்கு தான் அவமானம்.. ஸ்டூவர்ட் பிராட் நெத்தியடி
லண்டன்: சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் தட்டுத்தடுமாறும் பாகிஸ்தானிடம் இங்கிலாந்து ஒரு போட்டியில் தோற்றால் கூட, அது இங்கிலாந்துக்கு தான் பெருத்த அவமானம் என இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பேசியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, லீட்ஸ் மற்றும் லண்டனில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது.
பாகிஸ்தான் அணி தான ஆடிய 4 இன்னிங்ஸ்களிலும் ஒருமுறை கூட 200 ரன்களை எட்ட முடியாமல், 'நாங்க இவ்வளவுதான்' என்பது போல பரிதாபமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்தனர். களத்தில் பேட்டிங் செய்ய முடியாமல் அவர்கள் திணறிய விதம் பரிதாபமாக இருந்தது.

இதனால் கடுப்பான மோஷின் நக்வி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தொடர் முடியும் முன்பே விசித்திர முடிவை எடுத்தது. முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா உட்பட 7 சீனியர் வீரர்களை அதிரடியாக வீட்டுக்கு அனுப்பியது. அவர்களுக்கு பதிலாக எந்த சர்வதேச அனுபவமும் இல்லாத 5 புதுமுகங்கள் உள்பட 7 பேரை கடைசி போட்டிக்கு அவசர அவசரமாக களமிறக்கியுள்ளது.
இந்த கூத்தை பார்த்து போட்காஸ்டில் பேசிய ஸ்டூவர்ட் பிராட், "ஆரம்பத்தில் பாகிஸ்தான் வீரர்கள் சுமாராக ஆடுவதாக நான் விமர்சித்ததற்கு வருந்துகிறேன். பாவம் அவர்கள் மீது தவறில்லை. கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக சீரழிவு, தேர்வுக்குழுவின் குளறுபடி மற்றும் அடிக்கடி பயிற்சியாளர்களை மாற்றியதே அணியின் இந்த பரிதாப கதிக்கு காரணம்" என்றார்.
மேலும், "தொடர் தொடங்குவதற்கு முன்பே பாகிஸ்தான் பலவீனமான அணி, இங்கிலாந்து 3-0 என வெல்லும் என்று நான் சொன்னபோது பாகிஸ்தான் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டனர். இப்போது களத்தில் நடப்பதை பார்த்தாலே உண்மை புரியும். பர்மிங்காமில் நடக்கும் கடைசி டெஸ்டிலும் இங்கிலாந்து எளிதாக வெல்ல வேண்டும். இந்த சொதப்பல் பாகிஸ்தானிடம் இங்கிலாந்து ஒரு போட்டியில் தோற்றால் கூட அது இங்கிலாந்துக்கு தான் மாபெரும் அவமானம்" என பிராட் நெத்தியடியாக கூறியுள்ளார். வீரர்களை மாற்றி நாடகம் போடும் பாகிஸ்தான் வாரியத்தின் இந்த செயல் கிரிக்கெட் உலகில் பெரும் கேலிப்பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications

