டெல்லி : ஐபிஎல் லீக் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி தனது சொந்த மண்ணில் கொல்கத்தாவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் இஷாந்த் சர்மா, இங்கிலாந்து அதிரடி வீரர் பில் சால்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று கொல்கத்தா அணியில் ஜேசன் ராய் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் இன்று அட்டகாசமாக செயல்பட்டனர். ஆடுகளமும் தொய்வாக இருந்ததால் , கொல்கத்தா அணி வீரர்கள் அடிக்கும் பந்து, மாமியார் வீட்டுக்கு செல்ல மறுக்கும் மருமகள் போல் பவுண்டரிக்கு செல்ல தடுமாறியது.

வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் 4 ரன்களிலும், கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய வெங்கடேஷ் ஐயர் , இந்தப் போட்டியில் டக் அவுட் ஆனார். கேப்டன் நிதிஷ் ரானா 4 ரன்களிலும், மந்தீப் சிங் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 6 ரன்களில் வெளியேறினார்.
தொடக்க வீரர் ஜேசன் ராய் மட்டும் பொறுப்புடன் விளையாடி 39 பந்துகளில் 43 ரன்கள் சேர்க்க, இறுதியில் தனி ஆளாக போராடிய ஆண்டிரு ரஸில் 31 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். இதில் கடைசி ஓவரில் மட்டும் ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். இஷாந்த் சர்மா, நோக்கியா, அக்சர், குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதன் மூலம் கேகேஆர் அணி 20 ஓவர் முடிவில் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.