சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தல தோனி அடித்த இரு சிக்சர்கள் மூலம் ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதனால் குஷியான ரசிகர்கள் பல்வேறு வெறித்தனமான மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதில் டாப் மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
1426 நாட்களுக்கு பின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தல தோனி களமிறங்க போகிறார் என்பதே ரசிகர்கள் மத்தியில் இன்றைய ஐபிஎல் போட்டி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க போதுமானதாக இருந்தது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி விளையாடியது. இதில் முதல் சென்னை அணி பேட்டிங் செய்தது. அத்தனை வீரர்களும் அதிரடியாக ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி நேரத்தில் தல தோனி களமிறங்கி அடுத்தடுத்து இரு சிக்சர்களை பறக்கவிட்டார்.

140 கி.மீ.-க்கும் அதீத வேகத்தில் வந்த இரு பந்துகளை தோனி சிக்சர்களாக மாற்றியது சென்னை ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. தோனி சிக்சர் அடித்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அடுத்தடுத்து மீம்ஸ்களை வெளியிட்டு கொண்டாட்டத்தை வெளிப்படுத்து வருகின்றனர். அந்த மீம்ஸ்களில் சில டாப் மீம்ஸ்களை பார்க்கலாம். அதில் எம்.எஸ்.தோனி சிக்சர்கள் விளாசிய புகைப்படத்தை பகிர்ந்து, "போர்க்கண்ட சிங்கம் யார்க்கண்டு அஞ்சும்" விக்ரம் படத்தில் வரும் பாடலை குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளனர்.

அதேபோல் 146 கி.மீ. வேகத்தில் மார்க் வுட் வீசிய கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் இமாயல சிக்சரை தோனி விளாசினார். கிட்டத்தட்ட 90 மீ தூரத்திற்கு சென்று பந்து விழுந்தது. அதனை வர்ணிக்கும் வகையில் பீஸ்ட் படத்தில் வரும் பீஸ்ட் மோடு பாடலில் உள்ள ஒரு வரியில், பல பேரின் முகமா நின்னு ஆடுற புலிதானே என்று எழுதப்பட்டிருக்கும். அந்த லிரிக் வீடியோவில் வரும் "நின்னு ஆடுற புலி தானே" என்று தோனியை புகழ்ந்து உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

கடைசி ஓவருக்கும் தோனிக்கும் இடையிலான காதல் கதை உலகின் மிக அழகானது. திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுஷ் மற்றும் கருணாஸிடம் சாராயம் வாங்குவதற்காக மயில்சாமி ஏமாற்றுவார். இறுதியாக அவர் ஏமாற்றுகிறார் என்பது தெரிந்து சாராயம் கொடுக்க தனுஷ் முயலும் போது, மயில்சாமி "I am Finished" என்று சொல்லுவார். அந்த வகையில் சில தோனி ரசிகர்கள், தல சிக்சர் அடித்தாலே போதும் என்று சொல்லுவார்கள். இன்றைய போட்டியில் தோனி இரு சிக்சர்களை அடித்ததால், மயில்சாமி வசனத்தை மாற்றி " 2 balls.. 2 Sixes.. I Am Finished for Today" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் தோனி வெறியர்களுக்கானது.

நீண்ட நாட்களாக தோனி நெட் பவுலர்களை சிக்சர்களாக அடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. இதனை வைத்து மும்பை, ஆர்சிபி ரசிகர்கள் தோனியை கிண்டல் செய்து வந்தனர். ஆனால் தோனி இரு போட்டிகளில் 3 சிக்சர்களை விளாசியுள்ளார். இதனை குறிப்பிட்டு வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசனின் தொடக்க காட்சியில், "என் கண்ணு வேணும்னு கேட்டியாமே" என்று வசனம் பேசி இருப்பார். அந்த வசனத்தை தோனிக்கு பொறுத்தி, "ஏதோ நெட் பவுலர்ஸ்-அ மட்டும் தான் அடிப்பான்னு சொன்னியாமே" என்று கேட்பது போல் உருவாக்கப்பட்ட மீம் ரசிகர்களுக்கான கூல்பம்ப் ஃபீல்.

இன்றைய ஐபிஎல் போட்டியில் அடுத்தடுத்து இரு சிக்சர்களை விளாசியதன் மூலம் 5 ஆயிரம் ரன்களை தோனி கடந்து சாதனை படைத்தார். இதனை அபியும் நானும் படத்தில் வரும் ரவி சாஸ்திரி கதாபாத்திரம் பேசும், "எங்க அம்மா சார்" என்ற வசனத்தை "எங்க தல சார்" என்று தோனிக்குப் பொருத்தி உருவாக்கப்பட்ட மீம் செண்டிமெண்டல் டச்.