1900 ஒலிம்பிக்கில் முதல் முறையாக இடம்பெற்ற கிரிக்கெட்.. இந்தியா பங்கேற்ற முதல் தொடரும் இதுவே
பாரீஸ் : 1900 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏனென்றால் இந்த தொடரில் தான் முதல்முறையாக மகளிர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல் சுமார் ஆறு மாதங்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது.
தொடக்க விழா, நிறைவு விழா என எதுவுமே நடைபெறாமல் இந்த தொடர் நடந்தது. இன்னும் சொல்லப்போனால் இந்த போட்டிகளில் பங்கேற்ற பலருக்கும் தாங்கள் ஒலிம்பிக்கில் விளையாடினோம் என்று தெரியாதாம்.
மேலும் உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும் இரண்டாவது விளையாட்டான கிரிக்கெட் இந்த தொடரில் முதல் முறையாக இடம் பெற்றிருந்தது. இம்முறை 26 நாடுகள் சேர்ந்த 1226 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 19 விளையாட்டு போட்டிகளில் 95 பிரிவுகளில் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பாய் மரகு படகு போட்டியில் ஹெலன் என்ற பெண், சுவிட்சர்லாந்து நாட்டுக்காக பங்கேற்று முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்ற பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
அது மட்டுமல்லாமல் கிரிக்கெட்டில் பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம் நெதர்லாந்து ஆகிய நான்கு அணிகள் முதலில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் இறுதி போட்டியில் விளையாடின. இதில் இங்கிலாந்தில் 158 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இதில் இந்தியா சார்பாக நார்மன் ரிச்சார்ட் என்ற இந்திய பிரிட்டன் வீரன் பங்கேற்று தடகளத்தில் இரண்டு வெள்ளி பதக்கத்தை வென்றார்.
சொந்த மண்ணில் நடைபெற்றதால் பிரான்ஸ் 27 தங்கம், 38 வெள்ளி 37 வெண்கலம் என முதன்முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் வென்ற நாடு என்று பெருமையை பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றது. அமெரிக்கா 19 தங்கம், 14 வெள்ளி 15 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் இங்கிலாந்து 15 தங்கம் 8 வெள்ளி 9 வெண்கலம் என 32 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் இருந்தது.


Click it and Unblock the Notifications