ஐபிஎல் வேற வரப்போகுது.. எல்லாத்தையும் மறந்துருவாங்க.. இந்திய வீரர்களை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்
சென்னை : ஐபிஎல் 16வது சீசன் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளதால் இந்திய அணி வீரர்கள், இந்த தோல்வியை மறந்துவிடுவார்கள் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா முதல் முறையாக தங்களது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. அதுவும் உலககோப்பை நடைபெறும் ஆண்டில் இப்படி நடந்திருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
வெறும் 270 ரன்கள் என்ற இலக்கை இந்தியா துரத்த முடியாமல் ஆட்டமிழந்தது, பேட்டிங்கில் உள்ள குறைபாடுகளை தெளிவாக காட்டுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு அளித்த பேட்டியை தற்போது பார்க்கலாம்.

தோல்விக்கு காரணம்
சென்னையில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள் என்று குறிப்பிட்ட கவாஸ்கர், இதனால் இந்திய வீரர்களால் சிங்கிள்ஸ் மற்றும் பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை என்று சுட்டிக்காட்டினார். இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தூக்கி அடித்துவிட்டு இந்திய வீரர்கள் ஆட்டமிழந்ததாக கவாஸ்கர் கூறினார்.

பார்ட்னர்ஷிப் இல்லை
270 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது இந்திய அணி பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினால் மட்டுமே இலக்கின் அருகிலாவது செல்ல முடியும் என்று கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார். 90 அல்லது 100 ரன்கள் என்று பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய கவாஸ்கர், விராட் கோலி, கேஎல் ராகுல் அமைத்த பார்ட்னர்ஷிப் போல் இன்னொரு பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும் என்றும் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

வித்தியாசம்
இதே போன்று ஆஸ்திரேலியா வீரர்கள் ஸ்டம்பை நோக்கி தொடர்ந்து ஒரே லைனில் பந்துவீசியதால் இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்திருக்க முடியும் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக ஃபில்டிங் செய்து இந்திய அணிக்கு அழுத்தத்தை கொடுத்திருப்பதாகவும் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தான் நேற்றைய ஆட்டத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தியதாகவும் கவாஸ்கர் கூறினார்.

மறந்துவிடாதீர்கள்
இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் தொடர் தொடங்குவதால், இந்திய வீரர்கள் இந்த தோல்வியை மறந்துவிடக்கூடாது என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இப்படி பட்ட தோல்வியை இந்திய வீரர்கள் அடிக்கடி மறந்துவிட கூடாது என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். உலககோப்பையில் ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திக்க நேரிடும் என்பதால் , இந்தியா பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications