வெட்கமே இல்லாமல் உங்களை பயன்படுத்துவார்கள்.. உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளுக்கு கவாஸ்கர் அட்வைஸ்
மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தங்களது முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் கொண்டாடி வருகிறது. ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான அணி கோப்பையை வென்றதிலிருந்து, வீராங்கனைகளின் பங்களிப்பைப் போற்றும் வகையில் நாடு முழுவதும் பரிசு மழையும், பாராட்டு விழாக்களும் களைகட்டியுள்ளன.
இந்தக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் 1983-ல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முக்கிய வீரரான சுனில் கவாஸ்கர், தற்போதைய சாம்பியன் வீராங்கனைகளுக்கு ஒரு அனுபவம் சார்ந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இலவச விளம்பரம் தேடுபவர்கள்!
தனது சமீபத்திய கட்டுரை ஒன்றில் சுனில் கவாஸ்கர், வெற்றி பெற்ற வீராங்கனைகளைச் சுற்றி இலவச விளம்பரம் தேட முயற்சிக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து கடுமையாகச் சாடியுள்ளார். "மகளிர் அணிக்கு எனது சிறிய எச்சரிக்கை. உங்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுகளில் சில உங்களை வந்து சேரவில்லை என்றால், தயவுசெய்து ஏமாற்றம் அடையாதீர்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
"இந்தியாவில், வெற்றியாளர்களின் தோள்களில் சவாரி செய்து, தங்களுக்கு இலவச விளம்பரத்தைத் தேடிக்கொள்ள விளம்பரதாரர்களும், பிராண்டுகளும், தனிநபர்களும் முந்திக்கொண்டு வருவார்கள். அணியைப் பாராட்டி வெளியாகும் முழுப்பக்க செய்தித்தாள் விளம்பரங்களையும், பேனர்களையும் பாருங்கள். அவர்கள் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்களாக இல்லாவிட்டால், மற்றவர்கள் அனைவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகளுக்கு எதையும் கொடுக்காமல், தங்களது பிராண்டுகளை விளம்பரப்படுத்தவே முயற்சிக்கிறார்கள்" என்று கவாஸ்கர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
1983 உலகக் கோப்பை அனுபவத்திலிருந்து பாடம்
இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்தையே மாற்றியமைத்த 1983 உலகக் கோப்பை வெற்றியின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் கவாஸ்கர் பகிர்ந்துள்ளார். "1983-ல் நாங்கள் கோப்பையை வென்றபோதும், ஊடகங்களில் பெரிய அளவில் செய்திகள் வந்தன, எங்களுக்குப் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், அவற்றில் அனேகமாக எதுவும் நிறைவேற்றப்படவில்லை."
"ஊடகங்களைக் குறை சொல்ல முடியாது; அவர்களும் இந்த வெட்கமற்ற நபர்களால் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதை உணராமல், இந்த ஆடம்பரமான அறிவிப்புகளை வெளியிட்டனர். எனவே, வீராங்கனைகளே! இந்த வெட்கமற்றவர்கள் உங்கள் வெற்றியைத் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்தினால் கவலைப்படாதீர்கள்" என்று அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
"பல ஆண்டுகள் கடந்த பின்னரும், சாதாரண இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அன்புதான் எங்களுடைய மிகப்பெரிய செல்வம் என்று 1983 அணி வீரர்கள் சொல்வார்கள். நீங்களும் உங்கள் ஆட்டத்தை நிறைவு செய்யும்போது, அதுதான் உங்களுக்கும் மிகப்பெரிய செல்வமாக இருக்கும். மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகள். இந்த தேசம் உங்களைப் பற்றிப் பெருமை கொள்கிறது." என்று அவர் தனது கட்டுரையில் கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications