அவர்தான் இந்தியாவின் எதிர்காலம்.. 3 பார்ஃமேட்களிலும் கலக்குவார்.. சிஎஸ்கே வீரரை பாராட்டிய கவாஸ்கர்
டெல்லி: சிஎஸ்கே வீரரின் பேட்டிங் நுட்பத்தை வெகுவாக பாராட்டியுள்ள கவாஸ்கர், வரும் காலத்தில் 3 ஃபார்மேட்களிலும் இந்திய அணிக்காக முக்கிய வீரர்களில் ஒருவராக சிஎஸ்கே வீரர் இருப்பார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது. அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்த இந்தியா சூப்பர் 12 சுற்றுடன் நடையைக் கட்டியது.
இந்த படுதோல்விக்குப் பிறகு இந்திய அணி, அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்குத் தயாராகி வருகிறது. வரும் நவம்பர் 17ஆம் தேதி நியூசிலாந்து தொடர் ஆரம்பிக்கிறது.

நியூசிலாந்து தொடர்
இந்தியா வரும் நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் கோலி, பும்ரா, ஷமி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியுள்ள நிலையில், அணியின் புதிய கேப்டனாக ரேஹித் சர்மா கேப்டனாகவும், துணை கேப்டனாக கே எல் ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். முழு நேர கேப்டனாக ரேஹித் சர்மாவுக்கு இது முதல் தொடர் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
முக்கிய வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்ஷல் படேல், அவேஷ் கான், வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட்டிற்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுனில் கவாஸ்கர்
நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் தேர்வு மகிழ்ச்சி அளிப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதைப் பாராட்டிய அவர், ருதுராஜ் கெய்க்வாட்டின் தேர்வு மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ருதுராஜ் மொத்தம் 635 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். அவரது ஆட்டம் அனைத்து கிரிக்கெட் ஜாம்பவான்களையும் கவர்ந்தது.

அற்புதமான வீரர்
ருதுராஜ் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் டி20, டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் என அனைத்து ஃபார்மேட்களிலும் இந்தியாவுக்கு மிக முக்கிய வீரராக உருவெடுப்பார் என்றும் தெரிவித்தார். இது குறித்து கவாஸ்கர் மேலும் கூறுகையில், "ருதுராஜ் ஒரு அற்புதமான வீரர். பலவிதமான ஷாட்கள் அடிக்கும் திறமை கொண்ட அவர், மூன்று வகையான போட்டிகளிலும் இந்தியாவுக்காகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டவர்.

என்ன காரணம்
சிறப்பான ஷாட்கள் தேர்வு செய்து விளையாடும் அவர், சூப்பரான டெக்னிக்கையும் கொண்டுள்ளார். போட்டியின்போது ஏற்படும் அனைத்து விதமான சூழல்களையும் சமாளிக்கும் மனோபாவத்தை அவர் கொண்டுள்ளார். அதனால் தான் மிகச் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக உருவாகும் ஆற்றல் அவருக்கு உள்ளது என நான் அடித்துக் கூறுகிறேன்" என்று கவாஸ்கர் தெரிவித்தார்.

ருதுராஜ் கெய்க்வாட்
உள்நாட்டு கிரிக்கெட்டில் மகாராஷ்டிர அணிக்காக விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். இருப்பினும், அப்போது அவரால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்தச் சூழலில் ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஷ்வின், அக்சர் படேல் , அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது. சிராஜ் ஆகியோர் இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ளனர்


Click it and Unblock the Notifications