
அடுத்தடுத்து விக்கெட்டுகள்
லார்ட்ஸில், கடந்த ஆக.12ம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்து. இந்தியா தரப்பில் லோகேஷ் ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். பிறகு, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் உதவியுடன் 391 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை விட அந்த அந்த அணி 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும், புஜாராவும், ரஹானேவும் நான்காம் நாள் ஆட்டத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். 206 பந்துகளை சந்தித்த புஜாரா 45 ரன்களும், 146 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா முன்னிலை
பிறகு நேற்று (ஆக.16) கடைசி நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த போதும், முகமது ஷமி - பும்ரா ஜோடி நம்ப முடியாத வகையில் பிரமிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது வரலாறு படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்தியா விரைவில் ஆல் அவுட் ஆகி, இங்கிலாந்து ஜெயித்துவிடும் என்று இந்திய ரசிகர்களே நினைத்துக் கொண்டிருந்த போது, இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 298 ரன்கள் குவிக்க இருவரும் காரணமாக அமைந்தனர். அந்த பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 151 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பதிவு செய்து, தொடரில் 1 - 0 முன்னிலை பெற்றது இந்திய அணி.

வேடிக்கை இங்கிலாந்து
இந்நிலையில், இப்போட்டியில் குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சற்று கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இங்கிலாந்து அணியின் டெக்னிக் மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக, இங்கிலாந்தின் தொடக்க பேட்ஸ்மேன்களின் டெக்னிக் வேடிக்கையாக இருந்தது. அவர்களின் ஒன் டவுன் பேட்ஸ்மேனான ஹசீப் ஹமீட் பதட்டமாகவே இருக்கிறார். அவுட்டாகிவிடுவோமா என்ற நிலையிலேயே இருக்கிறார். எனவே, அனைவரது பார்வையும் ஜோ ரூட் பக்கமே திரும்புகிறது. ஜானி பெயர்ஸ்டோவை பொறுத்தவரை பேட்டிங்கிற்கு ஏற்ற சூழல் இருந்தால் அடிக்கிறார். இல்லையென்றால் ஒன்றுமில்லாமல் போகிறார். ஜோஸ் பட்லர் ஒரு சிறந்த ஒயிட் பால் கிரிக்கெட் வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் நன்றாக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விளையாட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

இந்தியாவுக்கே கோப்பை
பந்துவீச்சில், அந்த அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டும் தான் இருக்கிறார். வேறு யாரும் சிறப்பாக செயல்படுவதாக நான் பார்க்கவில்லை. ட்ரென்ட் பிரிட்ஜில் ராபின்சன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதை வைத்து பார்க்கும் போது, இங்கிலாந்து வெறும் இரண்டரை வீரர்களை (ஆண்டர்சன், ரூட், ராபின்சன்) மட்டுமே நம்பியிருக்கும் அணி என்று தெரிகிறது. அதனால்தான் தொடரின் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இந்தியா வெல்லும் என்று நினைக்கிறேன். தொடரின் தொடக்கத்தில் இந்தியா 4-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற வேண்டும் என்று நான் கூறியிருந்தேன், மழை மட்டும் குறுக்கே வந்து நாசம் செய்யாதிருந்தால், நிச்சயம் நான் சொன்ன முடிவு சாத்தியம் என்று நான் இன்னும் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











