டி20 கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சுனில் நரைன்
டாரூபா: வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், டி20 கிரிக்கெட் வரலாற்றில் 650 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய உலகின் இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
2026 கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) தொடரில், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுனில் நரைன், செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார். டாரூபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு முன்பு 650 விக்கெட்டுகளை எட்ட அவருக்கு 1 விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. இப்போட்டியில் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து ஜான் காம்ப்பெல் விக்கெட்டை எல்.பி.டபிள்யூ முறையில் வீழ்த்தி அவர் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.

டி20 கிரிக்கெட்டில் இவருக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மட்டுமே 650 விக்கெட்டுகளைக் கடந்திருந்தார். ரஷித் கான் 547 போட்டிகளில் விளையாடி 736 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் அடுத்த மாதம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தொடர்ந்து டுவைன் பிராவோ 631 விக்கெட்டுகளுடனும், இம்ரான் தாஹிர் 582 விக்கெட்டுகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும் சிபிஎல் தொடர் வரலாற்றில் 137 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் சுனில் நரைன் தன்வசம் வைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் சுனில் நரைன், ஒரு குறிப்பிட்ட அணிக்காக 200 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வெளிநாட்டு வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் படைத்துள்ளார். அவர் கொல்கத்தா அணிக்காக 202 போட்டிகளில் 207 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் மிரட்டும் நரைன், டி20 கிரிக்கெட்டில் இதுவரை 390 இன்னிங்ஸ்களில் விளையாடி 4,881 ரன்கள் குவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

