டாடா காரை உடைத்த அபிஷேக் ஷர்மா.. 5 லட்சம் ரூபாய் அபராதம்? ஒரு சிக்ஸ் அடித்ததற்கு தண்டனை
லக்னோ: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா, லக்னோவில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்ததற்காக 5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த இருக்கிறார்.
இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு துவக்கம் அளித்த அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடினார். அவர் 17 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று ஃபோர் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். 200 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் சேர்த்திருந்தார்.

அவர் அடித்த ஒரு சிக்ஸ் மைதானத்தில் பவுண்டரி எல்லை அருகே விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருந்த டாடா கர்வ் காரின் கண்ணாடியை பதம் பார்த்தது. அந்தக் கண்ணாடியில் விரிசல் விழுந்தது. இந்த கார் 2025 ஐபிஎல் தொடரின் முடிவில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரருக்கு பரிசாக அளிக்கப்பட உள்ளது.
2025 ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னதாக, ஐபிஎல் தொடரின் விளம்பரதாரர்களில் ஒருவரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, தாங்கள் விளம்பரத்திற்காக மைதானத்தின் பவுண்டரி அருகே நிறுத்தி வைத்திருக்கும் காரை எந்த பேட்ஸ்மேன் ஆவது சிக்ஸர் அடித்து உடைத்தால், அந்த பேட்ஸ்மேன் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கள் கிரிக்கெட் உபகரணங்களை வழங்க வேண்டும் என கூறியிருந்தது.
அந்த உபகரணங்கள் கிராமத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் என்றும், அதன் மூலம் கிராமங்களில் கிரிக்கெட் விளையாட்டு ஊக்குவிக்கப்படும் என்றும் டாடா நிறுவனம் தெரிவித்தது. இதற்கு முன் மிட்செல் மார்ஷ் டாடா நிறுவனத்தின் காரை உடைத்திருந்தார். அவரும் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள தனது கிரிக்கெட் உபகரணங்களை அளித்தார். தற்போது அபிஷேக் ஷர்மாவும் ஒரு சிக்ஸ் அடித்து ஐந்து லட்சம் ரூபாய் அளவுக்கான அபராதத்தை செலுத்த இருக்கிறார்.
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 231 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் 48 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்து இருந்தார். அவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.


Click it and Unblock the Notifications