ஆரம்பம் சூப்பர்.. அப்புறம் சறுக்கல்… யாருக்கு வெற்றி? டெல்லி இலக்கை தடுமாறி துரத்தும் ஹைதராபாத்
ஹைதராபாத்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் வார்னரும், பெயர்ஸ்டோவும் அதிரடியாக ரன்களை குவித்த போதிலும் விக்கெட்டுகளை இழந்துள்ளதால் வெற்றி யாருக்கு என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஹைதராபாதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயோன போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தெர்வு செய்துள்ளது. இதையடுத்து, களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்கள் எடுத்தது.
பிரித்வி ஷா, தவான் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். அடுத்து வந்த முன்ரோ, அதிரடியாக ஆடி 40 ரன்கள் குவித்தார். 156 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கியது ஹைதராபாத்.

பறந்த பந்துகள்
தொடக்க வீரர்களாக அதிரடி மன்னன் வார்னரும், பெயர்ஸ்டோவும் களம் கண்டனர். இருவரும் ஒரு முடிவுடன் வந்திருப்பது ஆட்டத்தின் தொடக்கத்திலே தெரிந்தது. ஆரம்பம் முதலே டெல்லி பந்துவீச்சை வெளுத்தனர்.

வேண்டும் விக்கெட்டுகள்
கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி இருவரும் ரன் சேர்த்தனர். தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தினால் தான் ஆட்டத்தில் வெற்றி பெற முடியும் என்பது டெல்லி அணிக்கு தெரியும்.

எளிதாக 50 ரன்கள்
அதனால் விக்கெட்டுகளை எடுக்கும் முயற்சியில் களம் இறங்கியது. ஆனால் அதற்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. ரன்களும் வந்தபடியே இருந்தன. ஒரு கட்டத்தில் 50 ரன்களை ஹைதராபாத் அணி குறுகிய ஓவர்களிலேயே கடந்தது.

பெயர்ஸ்டோவ் அவுட்
டெல்லி அணியின் பந்துவீச்சுக்கு 10வது ஓவரில் பலன் கிடைத்தது. அரை சதத்தை நெருங்கி கொண்டிருந்த பெயர்ஸ்டோவ் 41 ரன்களில் வெளியேறினார்.

வில்லியம்சன் ஆட்டமிழப்பு
மகிழ்ச்சி அடைந்த டெல்லி அணியினர் மீண்டும் தமது முயற்சிகளை தொடங்கினர். 2வது விக்கெட்டுக்கு வார்னருடன் கைகோர்த்தார் கேப்டன் வில்லியம்சன். ஆனால்... வெறும் 3 ரன்களில் அவரும் டாட்டா காட்டிவிட்டு சென்றார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அதிரடியாக ரன்கள் குவித்த போதிலும் 3 ஓவர்களில் முக்கியமான 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது ஹைதராபாத். ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயம் ஹைதராபாத்துக்கு... விக்கெட்டுகள் தான் இலக்கு டெல்லிக்கு என்பதால் ஆட்டத்தை முடிவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications