"டி20 மட்டும் போதாது..." இளம் வீரர் அபிஷேக் சர்மாவுக்கு சுரேஷ் ரெய்னா கொடுத்த முக்கியமான அட்வைஸ்!
மும்பை: இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் அபிஷேக் சர்மா, டி20 போட்டிகளைத் தாண்டி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அறிவுறுத்தியுள்ளார். முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலில் பேசிய ரெய்னா, அபிஷேக் சர்மாவின் எதிர்காலம் குறித்துப் பல முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
பஞ்சாப்பைச் சேர்ந்த 26 வயதான அபிஷேக் சர்மா, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிரடியாக அரைசதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். ஆனால், சமீபகாலமாக அவர் டி20 மற்றும் உள்நாட்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2024 பிப்ரவரிக்கு பிறகு அவர் எந்தவொரு முதல்தரப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 24 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக், 1 சதம் மற்றும் 5 அரைசதங்களுடன் 30.60 சராசரியுடன் 1000-க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். அவரது தற்போதைய டி20 போட்டியாளரான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, துலீப் டிராபி இறுதிப்போட்டியில் விளையாடி வரும் நிலையில், அபிஷேக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்ப வேண்டும் என்று ரெய்னா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்துப் பேசிய ரெய்னா, "அபிஷேக் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஐபிஎல் உரிமையாளர்களும், கிரிக்கெட் சங்கங்களும், பயிற்சியாளர்களும் வீரர்களின் மனதில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்த எண்ணத்தை விதைக்க வேண்டும்" என்று கூறினார்.
சமீபத்திய இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் போன்றோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அபிஷேக் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து திணறி வந்தார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால், மைதானத்தில் அதிக நேரம் செலவிடவும், பொறுமையைக் கற்றுக்கொள்ளவும் முடியும். இது அவரது ஷாட் தேர்வையும், டி20 ஆட்டத்தையும் மேலும் மேம்படுத்தும் என்று சுரேஷ் ரெய்னா சுட்டிக் காட்டினார்.


Click it and Unblock the Notifications


