“ரிஷப் பண்ட்டின் நேரம் வரும்.. ஏன் இன்னும் ஒருநாள் அணியில் சேர்க்கவில்லை?”.. சுரேஷ் ரெய்னா கேள்வி
மும்பை: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் தனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றும், அவர் விரைவில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு திரும்புவார் என்றும் இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவுடனான கலந்துரையாடலில் சுரேஷ் ரெய்னா மனம் திறந்து பேசினார். அப்போது பண்ட் குறித்து ரெய்னா கூறுகையில், "பண்ட் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். அவர் விளையாடுவதை பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோரும் சிறப்பாக ஆடினாலும், பண்ட்தான் சிறந்த வீரர்களில் ஒருவர். எனக்கு மிகவும் பிடித்த வீரர் அவர்தான். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவித்து அசத்துகிறார். அவரிடம் தனித்துவமான ஒரு மேஜிக் இருக்கிறது.

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் தொடரிலும் அவர் விரைவில் முதிர்ச்சியடைவார். ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் ஏன் இன்னும் சேர்க்கப்படவில்லை என்று எனக்குப் புரியவில்லை. பண்ட்டை எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக ஆட விடுங்கள். அவரால் மிகப்பெரிய சாதனைகளை படைக்க முடியும். அவருக்கான நேரம் நிச்சயம் வரும்" என்றார்.
சமீபத்தில் சுப்மன் கில் தலைமையில் இலங்கை சென்ற இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. இதில் ரிஷப் பண்ட் 3 இன்னிங்ஸ்களில் 2 அரைசதங்களுடன் 56.00 சராசரியில் 168 ரன்கள் குவித்து அசத்தினார். கடந்த 2024ம் ஆண்டுக்கு பின் ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடாத ரிஷப் பண்ட், டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக விளங்குகிறார். இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 8 சதங்கள், 21 அரைசதங்களுடன் 3725 ரன்கள் குவித்துள்ளார்.
இதே போல் டி20 போட்டிகளில் கலக்கி வரும் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று ரெய்னா வலியுறுத்தினார்.
இதுகுறித்து ரெய்னா பேசுகையில், "அபிஷேக் சர்மா டெஸ்ட் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். வைபவ் மிக இளம் வயதை உடையவர். அவர் விளையாட விரும்புகிறாரா, அவரது பயிற்சியாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஐபிஎல் அணி உரிமையாளர்களும் மாநில கிரிக்கெட் சங்கங்களும் வீரர்களின் மனதில் டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை விதைக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications

