மும்பை : ரசிகர்களால் சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் 37 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தன்னுடைய அதிரடி பேட்டிங்கால் ரசிகர்களை கட்டிப்போட்ட சுரேஷ் ரெய்னா இந்திய அணியின் ஒப்பற்ற வீரராக இருந்திருக்கிறார்.
பல போட்டிகளில் இந்தியாவுக்காக தன்னலம் அற்ற இன்னிங்ஸ் ஆடி வெற்றி தேடி கொடுத்திருக்கிறார். ஆனால் அவருடைய செயல்பாடுகள் யாராலும் பெரியதாக கண்டுகொள்ளப்படாது. உதாரணத்திற்கு 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை என்றால் நாம் கம்பீர், யுவராஜ், சச்சின், தோனி போன்ற வீரர்களை தான் சொல்வோம்.

ஆனால் அந்த தொடரில் ரெய்னா தனது முக்கியமான ஆட்டத்தின் மூலம் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்து இருக்கிறார். 2011 உலகக்கோப்பை காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரெய்னா 28 பந்துகளில் 34 ரன்கள் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்வார். இதேபோன்று 2011 உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் சேர்ப்பார்.
இதன் மூலம் இந்திய அணி கௌரவமான இலக்கை தொட்டு அதில் வெற்றி பெறும். 2015 உலகக் கோப்பையில் காலிறுதியில் ரெய்னா 57 பந்துகளில் 65 ரன்கள் சேர்ப்பார். இப்படி பல கட்டங்களில் ரெய்னா இந்திய அணியை காப்பாற்றி இருக்கிறார். அதை போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒவ்வொரு முறையும் பிளே ஆப் சுற்றுக்கு சென்று இருக்கிறது என்றால் அதில் ரெய்னாவின் பங்கு மிகவும் அதிகம்.
இதுவரை 9 முறை ஐபிஎல் தொடரில் 400 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் ரெய்னா படைத்திருக்கிறார். தோனியின் நிழல் போலவே நட்பாக இருந்து வந்த ரெய்னா தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் தாமும் ஓய்வு முடிவை அறிவித்தார். ஆனால் இடையில் தோனிக்கும் ரெய்னாவுக்கும் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதனால் சிஎஸ்கே அணியில் ரெய்னா இடம்பெறுவதில்லை. இந்த நிலையில் இருவரும் மீண்டும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக வரும் மினி ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.