சுரேஷ் ரெய்னா வீட்ல விசேஷங்க! இன்று நிச்சயம், ஏப்ரல் 3ல் திருமணம்!!
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர் சுரேஷ் ரெய்னாவின் திருமண விழா களைகட்டத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் இன்றைய தினம் காசியாபாத் நகரில் உள்ள அவரது வீட்டில் நிச்சயமும், விருந்தும் நடைபெறுகிறது.
மணமகள் பிரியங்கா சவுத்ரி உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரை சேர்ந்தவர். இவர் சுரேஷ் ரெய்னாவின் தாயின் நெருங்கிய தோழியின் மகள் ஆவார், குழந்தையாக இருக்கும்போதே இருவரது குடும்பத்துக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது. பின்னர் பிரியங்காவின் குடும்பத்தினர் பஞ்சாப் மாநிலத்துக்கு இடம்பெயர்ந்து விட்டனர். அதன்பிறகு இரு குடும்பத்துக்கும் இடையே தொடர்பு இல்லாமல் போனது.
சில வருடங்களுக்கு முன்பு இருவரது குடும்பத்தினரும் ஒரு விழாவில் சந்தித்துக்கொண்டனர். அப்போது மீண்டும் நட்பு ஏற்பட்டது. பிரியங்காவை பெரிய பெண்ணாக பார்த்த ரெய்னாவின் தாய் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்கு ரெய்னாவும் சம்மதித்து விட்டார். மணமகள் பிரியங்கா தற்போது நெதர்லாந்து நாட்டில் பணிபுரிகிறார்.

திருமண விருந்து
திருமணத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 1ஆம்) தேதி காசியாபாத்தில் உள்ள ரெய்னாவின் வீட்டில் நிச்சய விழா நடைபெறுகிறது. அதோடு ரெய்னா தனது நண்பர்களுக்கு விருந்து கொடுக்கிறார். இதனையொட்டி மீரட் நகரில் இருந்து மணப்பெண் வீட்டினர் காசியாபாத் நகருக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
திருமணம் - வரவேற்பு
சுரேஷ் ரெய்னா-பிரியங்கா சவுத்ரி திருமணம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி லக்னோவில் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தைத் தொடர்ந்து பிரமாண்ட முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும், அதை டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அரசியல் பிரபலங்கள்
பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், பிசிசிஐ மூத்த நிர்வாகிகள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கிரிக்கெட் வீரர்கள்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு ரெய்னா, தனது திருமண பத்திரிக்கையை நண்பர்களுக்கு கொடுக்மல் இருந்தார் தற்போதுதான் தன்னுடைய அணி நண்பர்களுக்கு கொடுத்து திருமணத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தாராம். எனவே ஏராளமான விளையாட்டு வீரர்களும் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications