மும்பை: வங்கதேசத்துடனான ஒருநாள் போட்டித்தொடருக்கு இந்திய அணியின் கேப்டரான சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் டோணி, துணை கேப்டன் விராட் கோஹ்லி ஆகியோர் ஓய்வில் இருப்பதால் ரெய்னாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில், அடுத்தமாதம் 26ம்தேதி துவங்க உள்ள, இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது.
முன்னதாக வங்கதேசத்துடன் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இப்போட்டிகள் வங்கதேசத்தில் ஜூன் 15, 17 மற்றும் 19ம்தேதிகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில் மும்பையில் இன்று இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் சந்தீப்பாட்டீல் தலைமையில் நடந்த கூட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிரான அணி அறிவிக்கப்பட்டது.
அணி விவரம்: சுரேஷ் ரெய்னா (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, சட்டேஸ்வர் புஜாரா, ராபின் உத்தப்பா, அம்பட்டி ராயுடு, மனோஜ் திவாரி, கேதர் ஜாதவ், விருதிமான் சாஹா (விக்கெட் கீப்பர் ), பர்வேஸ் ரசூல், அக்சர் பட்டேல், ஆர்.வினய்குமார், உமேஷ்யாதவ், ஸ்டூவர்ட் பின்னி, மோகித் சர்மா, அமித் மிஸ்ரா. இவர்கள்தான் 15 பேர் கொண்ட அணியினர்.
இந்திய அணியின் வழக்கமான கேப்டன், டோணி, துணைக் கேப்டன், விராட் கோஹ்லி, சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின், மட்டைவீச்சாளர்கள் ஷிகார் தவான், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் சில நாட்கள் ஓய்வெடுக்க விருப்பம் தெரிவித்ததால் வங்கதேச அணிக்கு எதிரான இந்திய அணியில் அவர்கள் பெயர் இடம்பெறவில்லை.
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடிவரும் ராபின் உத்தப்பா, இந்திய அணிக்காக கடைசியாக 2008ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்த அம்பட்டி ராயுடு, மனோஜ் திவாரி, கேதர் ஜாதவ், சாஹா, அக்சர் பட்டேல், வினய் குமார், மோகித் சர்மா ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதேசமயம், ஏகப்பட்ட ரன்களை வாரி வழங்கிய பர்வேஸ் ரசூல், வேறு ஸ்பின்னர் இல்லாத காரணத்தால் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.