சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இல்லை.. சுரேஷ் ரெய்னா முக்கிய கருத்து.. சரிபட்டு வருமா??
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் சரியாக இருக்க மாட்டார் எனக்கூறியுள்ள சுரேஷ் ரெய்னா வித்தியாசமான கருத்தை முன்வைத்துள்ளார்.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மே 28ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தாண்டு அனைத்து அணிகளும் ஹோம் மைதானங்களில் விளையாடவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஸ்பெஷல் ஆண்டாக இருக்கலாம். கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு 40 வயதாகிவிட்டதால், இந்தாண்டு அவரது கடைசி சீசனாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

தோனி ஓய்வு
எம்.எஸ்.தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தான் ஓய்வு பெறுவேன் எனக்கூறியிருந்தார். அதற்கேற்றார் போலவே இந்தாண்டு வாய்ப்பு அமைந்துள்ளது. எனவே மேலும் ஒரு கோப்பையை வென்றுக்கொடுத்துவிட்டு தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் எனத்தெரிகிறது. இதற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

அடுத்த கேப்டன்
தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி தான் விவாதப்பொருளாக உள்ளது. ஜடேஜா கேப்டன்சிக்கு சரிவரமாட்டார் எனத்தெரிந்துவிட்டது. இந்தாண்டு சென்னை அணியால் அதிக தொகை கொடுத்து எடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் சிறப்பான கேப்டன்சியை செய்யக்கூடியவர் தான். தற்போது கூட இங்கிலாந்து டெஸ்ட் அணியை அவர் தான் வழிநடத்தி வருகிறார். இதனால் தோனிக்கு பிறகு பென் ஸ்டோக்ஸ் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரெய்னா கருத்து
இந்நிலையில் அது சரிவராது என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், என்னைப்பொறுத்தவரையில் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் தான் தோனியின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். தோனி எப்போதுமே இளம் வீரர்களிடம் நிறைய நேரங்களை செலவிடுவார். சில முக்கிய ஐடியாக்களை கூறுவார். அப்படி பார்த்தால் தோனி குறித்து ருதுராஜ் நிறைய அறிந்து வைத்திருப்பார்.

வாய்ப்பு கிடைக்குமா?
கெயிக்வாட் கடந்தாண்டு ஐபிஎல்-ல் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதே போல சிறப்பாக விளையாடி இந்திய அணி மற்றும் சிஎஸ்கே இரண்டிற்கும் அவர் பங்காற்றுவதை நான் பார்க்க வேண்டும். கேப்டன்சிக்கு நல்வாழ்த்துக்கள் ருதுராஜ் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். நல்ல திறமை உள்ளபோதும் கெயிக்வாட்டிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. இந்தாண்டு ஐபிஎல்-க்கு பின்னராவது அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications