டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரர்களில் ஒருவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவருமான சுரேஷ் ரெய்னா, தனது வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடும் காட்சி அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் விளையாட முடியாமல் வீரர்களும், அதை ரசிக்க முடியாமல் ரசிகர்களும் இந்த கொரோனாவைரஸால் சலிப்பில் உள்ளனர். இருந்தாலும் அப்படியே விட்ர முடியாதே. எனவே வீட்டுக்குள்ளேயே எல்லாவற்றையும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட் ஆடியுள்ளார் சுரேஷ் ரெய்னா. அதில் அவர் அவரது மகள் கிரேசியா உள்ளார். இன்னொரு குட்டிப் பையனும் உள்ளான். அப்பாவும், அந்தப் பையனும் கிரிக்கெட் விளையாடுகின்றனர். மகள் கார்சியாதான் அம்பயர்.

முதலில் அந்தப் பையன் பந்து வீச அப்பா பேட் செய்கிறார். அவர் அவுட் ஆகி விடுகிறார். இல்லை இல்லை என்று அம்பயர் மகள் சவுண்டு விடுகிறார். அடுத்து அப்பா பவுலிங் செய்கிறார். அப்போது அந்தப் பையன் அடித்த பந்தை அழகாக கேட்ச் செய்கிறார். அப்படியே வேகமாக திரும்பி மகளைப் பார்த்து ஹவுஸ்தட் என்று கேட்க உற்சாகமாக குரல் கொடுக்கிறார் மகள்.

இதில் கார்சியா டிஆர்எஸ் சைன் எல்லாம் வேறு செய்து கலக்கியிருக்கிறார். இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டிவிட்டரில் போட்டு உள்ளது. இப்போது இது வைரலாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுவது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த மாதம் 15ம் தேதிக்கு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது உள்ள நிலைமையைப் பார்க்கும்போது திட்டமிட்டபடி இவை நடைபெறுமா என்பது சந்தேகம்தான். எனவேதான் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் அப்செட்டாகியுள்ளனர்.