“தோனியின் பெருமை அவருக்கும் கிடைக்கும்”.. ஐபிஎல் 2023ல் நடக்கவுள்ள சுவாரஸ்ய நிகழ்வு.. ரெய்னா கருத்து
மும்பை: சென்னையில் எம்.எஸ்.தோனிக்கு கிடைத்த அதே வரவேற்பும், புகழும் மற்றொரு வீரருக்கும் கிடைக்கப்போகிறது. அதனை இந்த சீசனிலேயே அவர் நிரூபித்துக்காட்டுவார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி மே 28ம் தேதியன்று நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி போட்டி அட்டவணைகள் சமீபத்தில் வெளியாகின.
இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் உற்சாகம் காத்துள்ளது என்றே கூறலாம். இதற்கு காரணம் அனைத்து அணிகளும் ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர்
சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி இந்தானுடன் ஓய்வு பெறுவார் எனத்தெரிகிறது. அந்தவகையில் சென்னை மைதானத்தில் தனது கடைசி போட்டியை விளையாடிவிட்டு, கோப்பையை பெற்று தந்த பின்னர் விடை பெறுவார் எனத்தெரிகிறது. மற்றொருபுறம் கடந்தாண்டு பாதி போட்டிகளில் ஜடேஜாவின் கேப்டன்சியும், பாதி போட்டிகளில் தோனியின் கேப்டன்சியும் இருந்ததால் சொதப்பலானது. ஆனால் இந்த முறை தவறுகளை சரிசெய்ய முணைப்புடன் உள்ளனர்.

சுரேஷ் ரெய்னாவின் கருத்து
இந்நிலையில் இந்தாண்டு தோனிக்கு கிடைக்கும் அதே பெருமை ஜடேஜாவுக்கும் கிடைக்கும் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தனது ஃபார்ம் என்னவென்பதை நிரூபித்து காட்டியுள்ளார். தோனிக்கு மிகப்பெரிய தூணாக இருக்க முடியும் என ஜடேஜா நிரூபித்து காட்டியுள்ளார். தற்போது மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் நன்கு ஃபிட்டாக இருக்கிறார். சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்றால் நிச்சயம் தோனிக்கு கிடைத்த மரியாதை ஜடேஜாவுக்கும் கிடைக்கும்.

ருதுராஜ் கெயிக்வாட்
தொடர்ந்து பேசிய அவர், ருதுராஜ் கெயிக்வாட் சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் விளையாடுவார். அவர் இந்த முறை நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த சீசனின் சென்னையில் வெற்றியுடன் தொடங்கும். ரசிகர்களின் ஆசைகளை நிறைவேற்ற தோனியும் தயாராக உள்ளார் என ரெய்னா கூறியுள்ளார்.

பயிற்சி முகாம்கள்
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக சென்னை அணி வரும் மார்ச் முதல் வாரத்தில் இருந்து பயிற்சி முகாமை ஏற்படுத்தவுள்ளது. தோனி, தீபக் சஹார் உள்ளிட்டோரும் அதில் பங்கேற்கின்றனர். மற்றொருபுறம் குஜராத் அணி ஏற்கனவே பயிற்சி முகாமை தொடங்கிவிட்டது.


Click it and Unblock the Notifications