மகனை இறக்கிய சுரேஷ் ரெய்னா.. “தந்தையைப் போல மகன்.. கிரிக்கெட் பயணம் தொடங்கிவிட்டது மகனே” என பதிவு
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மகன் ரியோ, தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதனை ரெய்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இது குறித்து சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகன் கிரிக்கெட் பேட், ஹெல்மட் உள்ளிட்ட உபகரணங்களுடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களின் தொகுப்பில், அவரது மகன் ரியோ கிரிக்கெட் பேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்குச் சென்று தனக்கான பேட்டுகளைத் தேர்வு செய்வதைக் காண முடிகிறது. இந்த புகைப்படங்களுடன் ரெய்னா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "தந்தையைப் போல மகன்! நமது கிரிக்கெட் பயணம் தொடங்கிவிட்டது மகனே. கிரிக்கெட் விளையாட்டின் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் அதன் அப்பாவித்தனத்தை உனது கண்கள் வழியே மீண்டும் ஒருமுறை அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நாம் இருவரும் இணைந்து பல அழகான நினைவுகளை உருவாக்குவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2005 முதல் 2018 வரை இந்திய அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா, 322 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ரெய்னாவும் 2020 ஆம் ஆண்டில் தனது ஓய்வை அறிவித்தார். அவர் இந்திய அணிக்காக 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் ரெய்னா வசம் உள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்.. முன்னணி வீரர் வாவ்ரிங்கா தோல்வி.. அல்காரஸ், சபலென்கா, ஸ்வியாடெக் வெற்றி
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் முக்கிய வீரராக இருந்த ரெய்னா, 'சின்ன தல' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். அவர் 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5,528 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணிக்காகவும் நீண்ட காலம் கிரிக்கெட் ஆடி இருக்கிறார் ரெய்னா. தற்போது அவரது மகன் ரியோவும் கிரிக்கெட் பேட்டுடன் களம் இறங்கியுள்ளது ரெய்னாவின் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications