இஸ்லாமாபாத்: ஆறு வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடும் அணி ஒன்று பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்யப்போகிறது. ஆம்.. ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானில் 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே அணி பங்கேற்கிறது.
2009ம் ஆண்டு மார்ச் மாதம், பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்த இலங்கை கிரிக்கெட அணியினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதுவும், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூரில் இந்த துப்பாக்கி சூடு நடந்தது.

அதிருஷ்டவசமாக இந்த தாக்குதலில் இலங்கை வீரர்கள் காயமின்றி தப்பினர். தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின்போது, பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் நடுவரான அசான் ரசாவும் படுகாயமடைந்தார். அவர் ஒரு மாத கால போராட்டத்திற்கு பிறகு உயிர் தப்பினார்.
இந்நிலையில், ஜிம்பாப்வேக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடரில் மீண்டும் அசான் ரசா நடுவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அலீதம்தார், சோசப் ரசா, அகமது சகாப் மற்றும் காலித் முகமது ஆகியோரும், நடுவர்களாக பணியாற்ற உள்ளனர். இவர்கள் அனைவருமே பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களாவர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாதுகாப்பு ஆய்வவு குழு நடத்திய ஆய்வில், பாகிஸ்தானில் வெளிநாட்டு நடுவர்கள் பணியாற்றுவது சரியாக இருக்காது என்ற முடிவு எடுக்கப்பட்டது. எனவே, முழுக்க பாகிஸ்தான் நடுவர்களே இந்த தொடரில் பணியாற்ற உள்ளனர்.
ஐசிசி விதிமுறைகள் படி, உள்நாட்டை சேர்ந்தவர்கள் முழுக்க நடுவர்களாக பணியாற்ற கூடாது. ஆனால், பாகிஸ்தானுக்காக இந்த விதிமுறையை ஐசிசி தளர்த்தியுள்ளது.