சூர்யகுமாரின் வானவேடிக்கை.. அஸ்வினின் மாயாஜாலம்.. ஜிம்பாப்வேவை வச்சு செய்த இந்தியா - அபார வெற்றி!
மெல்பேர்ன்: சூர்யகுமார் யாதவின் அபார ஆட்டத்தால் ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. மெல்பேர்னில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிந்த போதும், கடைசி நேர போராட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை குவித்தனர்.

ஓப்பனிங்கே ஷாக்
தொடக்க வீரர் ரோகித் சர்மா தொடக்கத்திலேயே இரண்டு பவுண்டரிகளை அடித்த போதும், 15 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 51 ரன்களை விளாசினார். இவருக்கு உறுதுணையாக ஆடிய விராட் கோலி 26 ரன்களுக்கு அவுட்டாகி சென்றார்.

சூர்யகுமார் யாதவ் அதிரடி
தினேஷ் கார்த்திக்கிற்கு மாற்று வீரராக வந்த ரிஷப் பண்ட் வெறும்3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் 13.3 ஓவர்களில் 101/4 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறியது. ஆனால் அப்போது வந்த சூர்யகுமார் யாதவ் வாணவேடிக்கை காட்டினார். 25 பந்துகளை சந்தித்த 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு இந்தியா 186 ரன்களை குவித்தது.

திணறிய ஜிம்பாப்வே அணி
மிகவும் கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வேவுக்கு முதல் பந்தில் இருந்தே தலைவலி கொடுத்தனர் இந்திய பவுலர்கள். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே ஜிம்பாப்வே ஓப்பனர் விஸ்லே அவுட்டானார். இவரை தொடர்ந்து கேப்டன் கெரெய்க், ரெஜிஸ் சாகப்வா, சீன் வில்லியம்ஸ் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 36 ரன்களுகெல்லாம் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது.

சிறந்த பார்ட்னர்ஷிப்
இந்த சூழலில் ஜோடி சேர்ந்த சிகந்தர் ராசா - ரியான் பர்ல் சிறப்பாக நின்று 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். எனினும் அஸ்வினின் சுழலில் அந்த பார்ட்னர்ஷிப்பும் உடைந்தது. இதனால் 17.2 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பவுலிங் போட்ட அஸ்வின் 3 விக்கெட்கள், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்களையும், மற்றவர்கள் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

அரையிறுதிப்போட்டி
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. எனவே அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இந்தியா மோதுவது உறுதியாகியுள்ளது. இந்த போட்டி அடிலெய்டில் உள்ள மைதானத்தில் வரும் நவம்பர் 10ம் தேதியன்று நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications