மும்பை: இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து அவதூறாகப் பேசியதாக, பிரபல நடிகை ஒருவர் மீது 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. விளம்பரத்திற்காகப் பேசப்போய், தற்போது அந்த நடிகை வழக்கு சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா (MTV Splitsvilla) நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை குஷி முகர்ஜி தான் இந்தச் சர்ச்சையில் சிக்கியவர்.
கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குஷி முகர்ஜி, திடீரென ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டார். "எனக்கு கிரிக்கெட் வீரர்களை டேட்டிங் செய்வதில் விருப்பமில்லை. ஆனால் பல கிரிக்கெட் வீரர்கள் என் பின்னால் சுற்றுகிறார்கள். இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் எனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்புவார். இப்போது நாங்கள் பேசுவதில்லை, அவருடன் எனக்கு எந்தத் தொடர்பும் வேண்டாம்" என்று கூறியிருந்தார்.

திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சூர்யகுமார் யாதவ் பற்றி, நடிகை இப்படிப் பேசியது சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியது. விஷயம் விபரீதமாவதை உணர்ந்த குஷி முகர்ஜி, பின்னர் என்டிடிவி ஊடகத்திடம் பேசும்போது அப்படியே அந்தர் பல்டி அடித்தார். "ஐயோ.. நான் அப்படிச் சொல்லவில்லை. எங்களுக்குள் காதல்லாம் இல்லை. நண்பர்களாகத்தான் பேசினோம். என் பேச்சைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள். இடையில் என் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது" என்று மழுப்பலாகப் பதில் அளித்தார்.
இந்நிலையில், நடிகை குஷி முகர்ஜியின் இந்தப் பேச்சு சூர்யகுமார் யாதவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, மும்பையைச் சேர்ந்த சமூக வலைத்தள பிரபலமான ஃபைசான் அன்சாரி என்பவர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிபூர் காவல் நிலையத்தில் குஷி முகர்ஜி மீது புகார் அளித்துள்ள அன்சாரி, அவர் மீது ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அன்சாரி, "குஷி முகர்ஜி பொய் சொல்லி விளம்பரம் தேடுகிறார். சூர்யகுமார் யாதவ் நாட்டின் பெருமை. அவரைப் பற்றித் தவறாகப் பேசுவதை அனுமதிக்க முடியாது. குஷி முகர்ஜி மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும். இதற்காக நான் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்கிறேன். என் சட்டக் குழு மிகவும் வலுவானது" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடிகை பூனம் பாண்டே மீதும் இதேபோல 100 கோடி ரூபாய் வழக்கு தொடர்ந்தவர் இந்த ஃபைசான் அன்சாரி என்பது குறிப்பிடத்தக்கது. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல, வாயை விட்டுவிட்டு இப்போது 100 கோடி ரூபாய் வழக்கில் சிக்கித் தவிக்கிறார் நடிகை குஷி.