மும்பை: இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி பற்றவைத்த நெருப்பு, கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. சூர்யகுமார் யாதவ் குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு விஷயத்தை கூறி இருந்தார் குஷி முகர்ஜி.
"2026 டி20 உலகக்கோப்பை வரப்போகும் நேரத்தில் இந்திய அணி கேப்டனுக்கு இப்படி ஒரு சிக்கலா?" என்று ரசிகர்கள் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்த நிலையில், அந்தச் சர்ச்சைக்குத் தானே முன்வந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை குஷி முகர்ஜி. இன்னும் ஒன்றரை மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடங்கவுள்ள நிலையில், நடிகையின் இந்தத் திடீர் விளக்கம் இந்திய அணிக்கும், சூர்யகுமார் யாதவ் குடும்பத்திற்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை குஷி முகர்ஜி, "எனக்கு கிரிக்கெட் வீரர்களை டேட்டிங் செய்வதில் விருப்பமில்லை. ஆனால் பல கிரிக்கெட் வீரர்கள் என் பின்னால் சுற்றுகிறார்கள். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் எனக்கு நிறைய மெசேஜ் செய்வார். இப்போது நாங்கள் பேசுவதில்லை. அவருடன் என் பெயரை இணைத்துப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை" என்று கூறி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே திருமணமானவர். அவருடைய மனைவி தேவிஷா அவருடனே எல்லா இந்திய அணி சுற்றுப்பயணங்களுக்கும் செல்பவர். அப்படி இருக்கும்போது நடிகையின் இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், என்டிடிவி ஊடகத்திற்குப் பிரத்யேகமாகப் பேட்டியளித்த குஷி முகர்ஜி, ஒட்டுமொத்தமாகத் தனது முந்தைய பேச்சை மாற்றி கூறியுள்ளார். "சூர்யகுமார் யாதவுக்கும் எனக்கும் இடையே எந்தவிதமான காதல் உறவும் இல்லை. நாங்கள் நண்பர்களாகப் பேசிக்கொள்ளக் கூடாதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "என் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஒருமுறை போட்டி தோல்விக்குப் பிறகு அவர் என்னிடம் நண்பராகத் தான் பேசினார். தற்போது நாங்கள் தொடர்பில் இல்லை. இந்த சர்ச்சைக்குப் பிறகு நான் அவரிடம் பேசவும் இல்லை. என் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தது" என்றும் புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
நடிகை குஷி இப்படி ஒரு சர்ச்சையை கிளப்பிய நேரத்தில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது மனைவி தேவிஷாவுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். 2025 ஆசிய கோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார், அடுத்து உலகக்கோப்பையை வெல்ல வேண்டி சாமி தரிசனம் செய்தார். இந்த விவகாரம் குறித்து சூர்யகுமார் யாதவ் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
"நடந்தது நடந்துபோச்சு... இனிமே இதை வளர்க்க வேண்டாம்" என்பது போல, வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணிக்கும், கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறி சர்ச்சையை முடித்து வைத்துள்ளார் குஷி முகர்ஜி.
எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா (MTV Splitsvilla), பால்வீர் ரிட்டர்ன்ஸ் போன்ற தொடர்களில் நடித்த குஷி முகர்ஜி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.