பிசிசிஐ-க்கு சூர்யகுமார் யாதவ் அனுப்பிய மெசேஜ்.. "ஞாயிற்றுக்கிழமை ஜாலி.. 3 மணிநேரம்.. 1000 பந்துகள்"
மும்பை: இந்திய டி20 அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், 3 மணிநேரத்தில் 1000 பந்துகளை எதிர்கொண்டு தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவைப் பகிர்ந்து, பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகத்திற்குத் சூசகமான மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய சில மணிநேரங்களிலேயே சூர்யகுமார் யாதவ் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மைதானம் ஒன்றில் தீவிரமாக ஓடி, பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள சூர்யகுமார் யாதவ், "ஞாயிற்றுக்கிழமை ஜாலியாகச் சென்றது. வேகமாக ஓடினேன். 3 மணிநேரத்தில் சுமார் 1000 பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் செய்தேன். மிகவும் நன்றாக உணர்கிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் கேப்டனாக இந்திய அணியை வரலாற்று வெற்றிக்கு வழிநடத்திய சூர்யகுமார் யாதவ், அதன் பிறகு யாரும் எதிர்பாராத விதமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த 2026 ஐபிஎல் தொடரில் அவரது சுமாரான ஆட்டம் மற்றும் ஃபார்ம் அவுட் காரணமாகத் தேர்வுக்குழுவினர் இந்த அதிரடி முடிவை எடுத்தனர்.
இது குறித்து அப்போது பேசிய தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், "உலகக்கோப்பையை வென்ற கேப்டனை நீக்குவது கடினமான முடிவு தான். ஆனால், சூர்யகுமாரின் தற்போதைய ஃபார்ம் மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை, 128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எதிர்காலத் திட்டங்களுக்காக இந்த முடிவை எடுத்தோம்" என்று விளக்கியிருந்தார்.
ஆனாலும் சூர்யகுமார் யாதவ் சோர்ந்துவிடாமல் மீண்டும் இந்திய அணியில் தனது இடத்தை மீட்டெடுக்கும் நோக்கில் தீவிரப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே சமயம், அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களில் படுதோல்விகளை சந்தித்த தற்போதைய டி20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் அழுத்தம் உள்ளது.


Click it and Unblock the Notifications

