டி20 உலககோப்பையை வென்ற 3வது இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்த சூர்யகுமார், தனது வாழ்க்கை மாறியதற்கு மனைவி தான் காரணம் என்று கூறியுள்ளார். மனைவியுடன் நடந்த ஒரு சின்ன கலந்துரையாடால் தான் தாம் உயர்ந்தேன் என்றும் அவர் கூறினார். பல்வேறு கேள்விகளுக்கு சூர்யகுமார் பதில் அளித்துள்ளார்.
2024 மற்றும் 2026 அணிகளை ஒப்பிட்ட கேள்விக்கு சூர்யகுமார் அளித்த பதிலில், "இரு அணிகளுக்கும் இடையே சிறிய வித்தியாசங்களே இருந்தன. 2024 அணி அனுபவமும் அர்ப்பணிப்பும் மிக்கது, இந்த அணி ஆர்வம் நிறைந்தது. இவ்வாண்டு அனுபவம் குறைவு, ஆனால் உற்சாகம் அதிகம். வீரர்கள் பெரும்பாலும் 25 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள்," என்றார்.

சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி, 52 டி20 சர்வதேசப் போட்டிகளில் 42 வெற்றிகளைப் பெற்று 80.76% என்ற சிறந்த வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்தச் சாதனை, கல்வியில் தனக்குக் கிடைக்காத வெற்றியை ஈடுசெய்வதாக அவர் குறிப்பிட்டார். பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் மின் பொறியாளரான அவரது தந்தை அசோக் குமார் போலல்லாமல், படிப்பில் சூர்யகுமாருக்கு ஆர்வம் இருந்ததில்லை.
" title="தோனி கிடையாது.. இனி சஞ்சு சாம்சன் தான் விக்கெட் கீப்பர், கேப்டன் எல்லாம்.. அணில் கும்ப்ளே கருத்து
"பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பு மூலம் நான் அடைய முயன்ற சதவிகிதத்தை இன்று கிரிக்கெட்டில் பெற்று வருகிறேன். அங்கு என்னால் ஒருபோதும் 50-60%ஐயும் தாண்ட முடியவில்லை. இந்த வெற்றி விகிதம் கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புள்ளிவிவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றாலும், எந்த விளையாட்டிலும் யாரும் தோற்க விரும்புவதில்லை. நானும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறவே விரும்புகிறேன்."
"என் குடும்பத்தினர் முதலில் நல்ல கல்வி அளிக்கப் பெரிதும் முயன்றனர். குறுகிய காலத்திலேயே நான் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை, என்னைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்தனர். ஆனாலும், நான் விளையாட்டை ரசிப்பதைப் பார்த்ததால், கிரிக்கெட்டிற்கு முழு ஆதரவையும் வழங்கினர். 'நீ விளையாடப் போ, பிறகு எதுவும் இல்லையென்றால், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று கூறினர்," என்றார்.
சூர்யகுமார் யாதவ் 2010 இல் மும்பை அணிக்காக தனது முதல் தர, லிஸ்ட் ஏ மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமானார். ஆனால், சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாக 2021 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. முதலில் டி20 போட்டிகளிலும், பின்னர் ஒருநாள் போட்டிகளிலும் அவர் அறிமுகமானார்.

37 ஒருநாள் போட்டிகள் ஆடி, கடைசியாக நவம்பர் 2023 இல் களமிறங்கினார். அவரது டெஸ்ட் வாழ்க்கையோ ஒரு போட்டியோடு ஒரே இன்னிங்ஸில் 8 ரன்கள் உடன் முடிந்தது. ஆனால், அவர் தனது அடையாளத்தை டி20 சர்வதேசப் போட்டிகளில் தான் நிலைநாட்டினார். 113 போட்டிகளில் 3272 ரன்கள் குவித்து, தனது 360 டிகிரி ஆட்டத் திறனால் 162.94 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டை நிரூபித்துள்ளார்.
"2016 ஆம் ஆண்டில் நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தபோது எங்களுக்குத் திருமணம் நடந்தது. நான் நன்றாக விளையாடி மகிழ்ந்துகொண்டிருந்தேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காகச் சேர்ந்த 2018 ஆம் ஆண்டு வரை அவள் எனது பயணத்தையும் அன்றாட வழக்கங்களையும் கூர்ந்து கவனித்து வந்தாள்," என்று சூர்யகுமார் கூறினார். "அதன் பிறகு நாங்கள் சில விஷயங்களைச் சற்று வித்தியாசமாகச் செய்யத் தொடங்கினோம்," என்றார்.
"என் வயதுப் பிரிவில் என்னுடன் விளையாடிய பலர் இப்போது இந்திய அணிக்காக விளையாடுகிறார்கள், 'உன் மனதில் என்ன இருக்கிறது?' என்று அவள் என்னிடம் கேட்டாள். நானும் இந்திய அணிக்காக விளையாட விரும்பினேன் என்றேன். 'அதற்கான திட்டம் என்ன?' என்று அவள் கேட்டாள்."
"அது ஒரு சிறிய அழகிய கலந்துரையாடல். நமது முயற்சியில் எப்படி ஒரு படி மேலே செல்ல முடியும் என்பது பற்றிய விவாதம் அது. இந்திய அணிக்காக விளையாடி, அதற்காக வெற்றிகளைப் பெற வேண்டுமானால், அதை எப்படிச் செய்வது?" என்று கேட்டாள் என்றார்.

"உணவுக் கட்டுப்பாடு, நண்பர்கள் வட்டம், வார இறுதி விடுமுறைகள், அட்டவணை என பல விஷயங்களைக் குறைத்துக்கொண்டோம். இதன் விளைவாக, 2018 ஆம் ஆண்டில் 512 ரன்கள் குவித்து சிறப்பான ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் சீசனைப் பெற்றேன். அந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராகவும் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது," என்றார்.
"2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளிலும் இதையே தொடர்ந்தோம். நான் விளையாட்டை மேலும் ரசிக்கத் தொடங்கிவிட்டதை என் மனைவி பார்த்தாள். 2020 இல் 480 ரன்கள் குவித்து இன்னும் சிறப்பாக விளையாடினேன், பின்னர் 2021 இல் இந்திய அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டேன்," என்று அவர் தனது முன்னேற்றத்தைப் பகிர்ந்துகொண்டார்.
"திரைக்குப் பின்னால் எனக்கு நேர்மையான விஷயங்களைச் சொல்லி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என் மனைவி தேவிஷா. வாழ்க்கைத்துணை என்றால், அவர்கள் எப்போதும் நேர்மையாகவே இருப்பார்கள், ஏனெனில் அவர்கள் உங்கள் வளர்ச்சியையே விரும்புவார்கள். நாம் ஒன்றாக வளர வேண்டுமென்றால், உரையாடல்கள் நேர்மையாக இருக்க வேண்டும்," சூர்யகுமார் கூறினார்.
"சில சமயங்களில் அந்த உரையாடல்கள் கடுமையாக இருந்தாலும், நன்மை மட்டுமே அளித்திருக்கிறது. நான் இன்று இருக்கும் நிலைக்கு அந்தக் கலந்துரையாடல்கள் நீண்ட தூரம் உதவியுள்ளன. அவளுக்கு நான் 100% பாராட்டுகளை வழங்குகிறேன். ஏனெனில், அவள் எனக்கு கிரிக்கெட் ஆலோசனைகளை வழங்கவில்லை. ஆனால் வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களைச் சொல்லித்தந்தாள். நான் என்ன செய்ய வேண்டும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை எப்படி அணுக வேண்டும், என்னைப் நான் எப்படி வழிநடத்திக் கொள்ள வேண்டும் போன்றவற்றை அவளிடமிருந்து கற்றுக்கொண்டேன்,” என்றார்.

"கிரிக்கெட்டை வீட்டிற்கு எடுத்துச் செல்லக் கூடாது என்று அவள் கற்றுக்கொடுத்தாள். இது உட்பட பல முக்கியமான விஷயங்களை நான் கற்றேன். என்ன சாதனைகள் கிடைத்தாலும், நாம் பணிவாகவும், யதார்த்தமாகவும் இருக்க வேண்டும். வீட்டில் நீ சூர்யகுமார் யாதவ் இல்லை. சாதாரணமாக இரு. சாப்பிட்ட பிறகு உனது தட்டை சின்க்கில் வை! போன்ற இந்தச் சிறிய விஷயங்கள் எனது வாழ்க்கைக்குப் பெரும் மதிப்பைக் கூட்டின," என்று அவர் தனது மனைவி அளித்த நடைமுறைப் பாடங்களைப் பகிர்ந்துகொண்டார்.