துணை கேப்டனாக மாறிய சூர்யகுமார் யாதவ்.. இது சரியான முடிவா ? சாதகம் என்ன? பாதகம் என்ன?
மும்பை : 2023 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக டி20 போட்டியில் செயல்பட உள்ளார்.கடந்த ஆண்டு சூர்யகுமார் யாதவும் 31 சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 1164 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் சென்ற ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். சூர்யகுமார் யாதவின் இந்த சாதனைக்கு பரிசளிக்கும் விதமாக பிசிசிஐ அவரை துணை கேப்டனாக பதவி உயர்த்தியது.
இதனால் ஏற்கனவே துணை கேப்டனாக இருந்த கே எல் ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இதில் சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொறுப்பு சாதகமா பாதகமா என்பதை தற்போது பார்க்கலாம்.

சாதகம்
சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடியதால் அவரை அங்கீகரிக்கும் விதமாக பிசிசிஐ இந்த துணை கேப்டன் என்ற பதவியை வழங்கி இருக்கிறது. பொதுவாக சிறப்பாக செயல்படும் நபர்களுக்கு அவர்களை கௌரவிக்கும் விதமாக ஏதேனும் பொறுப்பு வழங்கினால் அது அவர்களுக்கு நிச்சயம் ஊக்கத்தை கொடுக்கும். இதனால் அவர்களது பணி மேலும் சிறக்க வாய்ப்பு இருக்கிறது இது பிசிசிஐ செய்த பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.

ஆட்டத்தை பாதிக்கலாம்
எனினும் இதில் ஒரு பாதகமும் இருக்கிறது. காரணம் எந்த நெருக்கடியும் இல்லாமல் தற்போது சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு துணை கேப்டன் என்ற பொறுப்பை வழங்கினால் அவருடைய பேட்டிங் திறமையை அது பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே நெருக்கடியான ஆட்டத்தில் நெருக்கடியான இடத்தில் விளையாடி வரும் சூர்யகுமார் யாதவுக்கு இது கூடுதல் அழுத்தத்தை தரலாம் என்று கிரிக்கெட் விமர்சனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன் அனுபவம் இல்லை
சூர்யகுமார் யாதவ் துணை கேப்டன் என்பதால் ஹர்திக் பாண்டியாவுக்கு ஏதேனும் ஒரு போட்டியில் காயம் அடைந்தால் அவர்தான் அந்த பொறுப்பை கவனிக்க வேண்டும். ஆனால் சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் இதுவரை கேப்டனாக இருந்ததில்லை. இதனால் அந்த பொறுப்புக்கு அவர் எப்படி சரியான நபராக இருப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன்பாக சில காலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கம்பிருக்கு துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் விளங்கியிருக்கிறார்.

தற்காலிக முடிவா?
அந்த அனுபவமும் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்கு சில போட்டிகளில் கேப்டனாக இருந்த அனுபவமும் சூர்யகுமார் யாதவுக்கு கைகொடுக்கும் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர். இந்திய டி20 அணியில் சூர்யகுமார் யாதவ் தற்காலிகமாக தான் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாரா? இல்லை இது நிரந்தர முடிவா என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை .ஒருவேளை பண்ட்,ஸ்ரேயாஸ் ஐயர், ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டால் அது நிச்சயம் சூர்யகுமார் யாதவை அவமானப்படுத்தும் விதமாக அமையும். இதனால் முன்பாகவே பிசிசிஐ அவரிடம் இது தற்காலிகமா, நிரந்தரமான முடிவா என்பது பற்றி தெரிவித்திருக்க வேண்டும். மேலும் சூர்யகுமாரின் வயதும் 32 ஆகிறது. இதனால் இளம் வீரர்களுக்கு துணை கேப்டன் பதவி தருவது தான் சரியானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications