மும்பை: ஐசிசி தரப்பில் வழங்கப்படும் சிறந்த டி20 வீரருக்கான விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் வென்றுள்ளார்.
ஐசிசி தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருது அளிக்கப்பட்டு வருகிறது. டெஸ்ட், டி20, ஒருநாள், சிறந்த அறிமுக வீரர் மற்றும் சிறந்த கிரிக்கெட்டர், சிறந்த மகளிர் கிரிக்கெட்டர் என்று பல்வேறு வகையான விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கான இறுதி கட்ட போட்டியில் 4 வீரர்கள் இருந்தனர்.

அந்த வகையில் நியூசிலாந்து அணியின் மார்க் சாப்மேன், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா, உகாண்டா நாட்டின் ராம்ஜானி மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இருந்தனர். இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட உகாண்டா அணி தகுதி பெற்றுள்ளது. அந்த அணியின் முக்கியமான வீரர் ராம்ஜானி.
இதனால் சிறந்த டி20 வீரருக்கான ஐசிசி விருதை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி வாக்கெடுப்பு நடத்தி ஐசிசி இன்று முடிவை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சிறந்த டி20 வீரருக்கான ஐசிசி விருதை இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் வென்றுள்ளார். கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே இலங்கை அணிக்கு எதிராக 51 பந்துகளில் 112 ரன்களை விளாசி அசத்தினார் சூர்யகுமார் யாதவ்.
அதன்பின் மீண்டும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலமாக 2023ல் மட்டும் சூர்யகுமார் யாதவ் 17 இன்னிங்ஸ்களில் விளையாடி 733 ரன்களை விளாசியுள்ளார். அதிலும் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் சராசரியாக 48.86 என்றும், அவரின் ஸ்ட்ரைக் ரேட் 155.95ஆகவும் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டி20 கிரிக்கெட்டில் அவரின் கன்சிஸ்டன்சியே இதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது.
அதேபோல் 2022ஆம் ஆண்டு சிறந்த டி20 வீரருக்கான ஐசிசி விருதை வென்ற சூர்யகுமார் யாதவ், இரண்டாவது முறையாக சிறந்த டி20 வீரருக்கான ஐசிசி விருதை வென்றுள்ளார். 2 முறை டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதை பெறும் முதல் இந்திய வீரர் இவர் தான். இதன் மூலமாகவே சூர்யகுமார் யாதவ் எப்படியான கிரிக்கெட்டை டி20 வடிவத்தில் விளையாடி வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி எப்படி இந்திய அணியின் முதுகெலும்பாக உள்ளாரோ, அதேபோல் டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு முதுகெலும்பாக இருக்கிறார்.