நம்பர் 1 இடமெல்லாம் பழைய கதை.. சிக்கலில் அதிரடி மன்னன்.. குறைந்த ஸ்கோர்.. என்ன செய்யப் போகிறார் SKY?
ராஜ்கோட்: இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சமீப காலமாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். 2024 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு சூர்யகுமார் யாதவ் இதுவரை 12 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் இரண்டு முறை மட்டுமே அரை சதம் அடித்து இருக்கிறார்.
அந்த இரண்டு அரை சதங்களை தவிர்த்து பார்த்தால் ஒரு முறை கூட அவர் 30 ரன்கள் தாண்டவில்லை. மேலும், ஐந்து போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் அறிமுகமாகி இருந்தார். அப்போது இருந்து ஒவ்வொரு ஆண்டும் அவரது பேட்டிங் சராசரியை எடுத்துப் பார்த்தால் 2024 ஆம் ஆண்டில் தான் அவரது பேட்டிங் சராசரி மோசமாக இருந்து இருக்கிறது.

2021ல் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் சராசரி 34.85 என்பதாக இருந்தது. 2022 இல் 46.56 என்ற சராசரியையும், 2023 இல் 48.86 என்ற சராசரியையும் வைத்து இருந்தார் சூர்யகுமார் யாதவ். ஆனால், 2024 ஆம் ஆண்டு சூர்யகுமார் யாதவின் பேட்டிங் சராசரி 26.81 என்பதாக சரிவை சந்தித்து இருக்கிறது.
2025 ஆம் ஆண்டு தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டி20 தொடரில் தான் முதன்முறையாக சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். இந்த தொடரில் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் அவர் 12 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். முதல் போட்டியில் டக் அவுட் ஆன அவர், இரண்டாவது போட்டியில் 12 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.
இதன் மூலம் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் சரிவை சந்தித்து வருவது தெரிகிறது. கடந்த ஆண்டு வரை சர்வதேச டி20 போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற இடத்தில் இருந்தார் சூர்யகுமார் யாதவ். ஆனால், தற்போது டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
ஐசிசி சர்வதேச டி20 போட்டி பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதல் இடத்தில் இடம் பிடித்து இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தின் ஃபில் சால்ட், மூன்றாவது இடத்தில் இந்தியாவின் திலக் வர்மா உள்ளனர். சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
இனியாவது சூர்யகுமார் யாதவ் தனது டி20 பேட்டிங்கை முன்னேற்றுவது குறித்து சிந்திக்க வேண்டும். இனியும் அவர் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் இல்லை என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு விளையாட வேண்டும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications