டெல்லி: தமிழக வேகப்பந்துவீச்சாளர் டி. நடராஜன் தனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பில் மோசமாகப் பந்துவீசிச் சொதப்பி இருக்கிறார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டியின் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.
அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தபோது, அந்த அணியின் துவக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் உடன் சேர்ந்து ஆடி விக்கெட் இழக்காமல் வெற்றியை நோக்கிச் சென்றனர். அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளராக இருந்த டி. நடராஜன் மிகப் பெரும் ஏமாற்றம் அளித்தார். அவர் மூன்று ஓவர்கள் வீசி 49 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். அதாவது ஒரு ஓவருக்குச் சராசரியாக 16.3 ரன்களை விட்டுக் கொடுத்து ஏமாற்றமளித்தார்.

இதற்கு முன் அவர் முதல் 10 போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக வாய்ப்பு தரப்படவில்லை. இது குறித்துப் பலரும் விமர்சித்து வந்தனர். அவருக்குப் போதிய வாய்ப்பளிக்கவில்லை எனக் குற்றம் சுமத்தினர். இந்த நிலையில், அவரது 11வது போட்டியில் மழையால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. அதனால் நடராஜன் அந்தப் போட்டியில் பந்துவீசவில்லை.
அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பதற்றம் காரணமாக அந்தப் போட்டி பாதியில் கைவிடப்பட்டது. அந்தப் போட்டியில் நடராஜன் 1.1 ஓவர் வீசி 4 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். அந்தப் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதால் அவரது அபாரமான பவுலிங் யாராலும் கவனிக்கப்படாமல் போனது. மேலும், அந்தப் போட்டி மீண்டும் நடத்தப்பட உள்ளதால், நடராஜனின் பந்துவீச்சு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவர் மீண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பெற்று ஆடினார். இதில் அவர் முக்கியப் பொறுப்பையும் ஏற்றார். ஏனெனில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி இருக்கிறார்.
எனவே, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சை ஏற்று நடத்தும் பொறுப்பு நடராஜன் வசம் வந்தது. நேற்றைய போட்டியிலும் முதல் துவக்கப் பௌலர்களாக அக்சர் படேல் மற்றும் நடராஜன் பந்துவீசினர். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. நடராஜன் பந்துகளை சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் எளிதாக எதிர்கொண்டனர். இதை அடுத்து அவர் மூன்று ஓவர்களில் 49 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
சாய் சுதர்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 108 ரன்களையும், சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 93 ரன்களையும் எடுத்தனர். 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மற்ற பவுலர்களும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்திருந்தாலும், நடராஜன் அனைவரையும் விடவும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தவராக இருந்தார். அடுத்து வரும் போட்டியில் அவர் தனது பவுலிங்கை மேம்படுத்தி, கட்டுக்கோப்பாக வீசுவாரா, விக்கெட்டுகளை அள்ளுவாரா என்று பார்க்கலாம்.