மும்பை: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஜிம்பாப்வேவை புரட்டி போட்டதற்கு முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்திய அணியும் இதேபோன்ற ஒரு வலிமையான வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்து, பிரம்மாண்டமான இலக்கை நிர்ணயித்தது. ஷிம்ரன் ஹெட்மையர் வெறும் 34 பந்துகளில் 85 ரன்கள் குவித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல், ஜிம்பாப்வே அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இது குறித்து பேசிய கும்ப்ளே, "இத்தகைய முக்கிய தருணங்களில் எப்படி வெற்றி பெறுவது என்பதை மேற்கிந்தியத் தீவுகள் அணி நன்கு புரிந்துகொண்டுள்ளது. அவர்களின் இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். குடகேஷ் மோட்டி மாயாஜாலம் செய்தார். இந்த பார்மட்டில், விரல் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களின் அடிக்கும் பகுதிக்கு வெளியே பந்துவீச முயற்சிப்பார்கள்.ஆனால் மோட்டியும் அகீல் ஹோசைனும் வித்தியாசமாகத் திகழ்ந்தனர்" என்று குறிப்பிட்டார்.

"ஷிம்ரன் ஹெட்மையர் நீண்ட காலமாகவே ஒரு சிறந்த ஃபினிஷர். பவுண்டரிகளை எப்படித் துல்லியமாக அடிப்பது என்பதை அவர் அறிவார். அவரிடம் சக்தியும் பொறுமையும் உள்ளன. 20 அல்லது 30 ரன்களின் வேகமான கேமியோக்களுடன் அவர் திருப்தி அடையவில்லை. அவர் அவற்றை பெரிய ஸ்கோர்களாக மாற்றுகிறார். அவர் 30 ரன்களில் அவுட் ஆகியிருந்தால், மேற்கிந்தியத் தீவுகள் 254 ரன்களை எட்டியிருக்க முடியாது," என்று ஹெட்மையரின் இன்னிங்ஸின் முக்கியத்துவத்தை கும்ப்ளே எடுத்துரைத்தார்.
ரோவ்மன் பவலின் நிதானமான அணுகுமுறையையும் கும்ப்ளே சுட்டிக்காட்டினார். பவல் 35 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். "பவல் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்த வலிமையான பவர்-ஹிட்டர். அவர் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினார், ஆனால் நிலைபெற்றதும், அவரைத் தடுக்க முடியவில்லை. பந்தை அவர் மிக பலமாக தாக்குகிறார்," என்று கும்ப்ளே தெரிவித்தார்.
முன்னதாக தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்ததால், மீதமுள்ள ஒவ்வொரு போட்டியின் முக்கியத்துவத்தையும் கும்ப்ளே வலியுறுத்தினார். "இந்த கட்டத்தில் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க தோல்வியை சந்தித்தது. அது வெறும் தோல்வி மட்டுமல்ல, அந்தத் தோல்வியின் விதமும் முக்கியம். இப்போதைய முக்கிய கேள்வி, ஜிம்பாப்வேவுக்கு எதிராக அவர்களால் வலிமையாக மீண்டு வர முடியுமா என்பதுதான்."

"இந்திய அணி வலுவான ஸ்கோர் மற்றும் ரன் ரேட்டை மேம்படுத்த, மேற்கிந்தியத் தீவுகள் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது போல மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு, மேற்கிந்தியத் தீவுகள் அணியையும் தோற்கடிக்க வேண்டும். இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவதுதான் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும். போட்டியை இந்திய அணி கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், நெட் ரன் ரேட் தானாகவே மேம்படும்," என்று கும்ப்ளே தெரிவித்தார்.