மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெறும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாஹன் கணித்துள்ளார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அகமதாபாத்தில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு, இம்முறை அதே மைதானத்தில் கோப்பையை வெல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி , நேற்று மேற்கிந்தியத் தீவுகளை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு வாஹன் இந்த கணிப்பை வெளியிட்டார். சூப்பர்-எட்டு சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோற்றதால் சிக்கலில் இருந்த அரையிறுதி வாய்ப்புகள், மேற்கிந்தியத் தீவுகளை தென் ஆப்பிரிக்கா வென்றதால் தற்போது சிக்கலை குறைத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அந்தப் போட்டியில் வென்றிருந்தால், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்திருக்கும். இப்போது, இந்திய அணிக்குத் தகுதிப் பாதை தெளிவாக உள்ளது. மார்ச் 1 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மற்றொரு வெற்றியும் பெற்றால், அவர்கள் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெறுவார்கள்.

இது குறித்து பேசிய வாஹன், "சில சமயங்களில் ஒரு சிறிய தடுமாற்றம் தேவை. தென் ஆப்பிரிக்கா - இந்தியா இறுதிப் போட்டி நடந்தால் எனக்கு சிறிதும் ஆச்சரியம் இருக்காது" என்று குறிப்பிட்டார். மேலும், அகமதாபாத்தில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தவறாகப்போனதைச் சரிசெய்ய அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்திய வீரர்களுக்கு இப்போது மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது" என்றும் அவர் விளக்கினார்.
2024 இறுதிப் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் மோதின. அதில் இந்திய அணி கோப்பையை வென்றது. நடப்புத் தொடரில் இந்தியாவை எதிர்கொள்ள தென் ஆப்பிரிக்கா சிறப்பாகத் தயாராகியுள்ளது. அகமதாபாத் லீக் ஆட்டத்தில், முக்கிய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை திறம்பட எதிர்கொண்டு, மெதுவான பந்துகளால் இந்திய பேட்ஸ்மேன்களை தென் ஆப்பிரிக்கா கட்டுப்படுத்தியது.சூப்பர் 8 சுற்றில் அடைந்த தோல்விக்கு தற்போது, இந்திய அணி பதிலடி தர வேண்டும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.