அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் மீது பந்தை வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அவர் தனது போட்டி ஊதியத்தில் 15 சதவீதத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியின் 11வது ஓவரில், டேரில் மிட்செல் பந்தை அடித்ததும் அர்ஷ்தீப் சிங் அதனைத் தாவிப் பிடித்தார். அப்போது ஸ்டம்பை நோக்கி எறிய வேண்டிய பந்தை, அவர் வேண்டுமென்றே டேரில் மிட்செலின் கால் பகுதியில் படும்படி வீசினார். இது மிட்செலுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் மைதானத்திலேயே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலையிட்டு நிலைமையைச் சமாளித்தார். ஆட்டத்திற்குப் பிறகு அர்ஷ்தீப் சிங் தான் செய்த தவறுக்காக மிட்செலிடம் நேரில் சென்று மன்னிப்பு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிசி விதிமுறைப்படி இது ஒரு 'நிலை 1' (Level 1) விதிமீறலாகும். இதற்கு அதிகபட்சமாகப் போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் வரை அபராதம் அல்லது இரண்டு டிமெரிட் புள்ளிகள் வரை வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியா சாம்பியன் பட்டம் வென்றாலும், அர்ஷ்தீப் சிங்கின் இந்தச் செயலுக்குக் கிடைத்த அபராதம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும், நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அர்ஷ்தீப் சிங்கின் செயல்பாடு பெரிதும் பாராட்டப்பட்டது. இருப்பினும், இறுதிப் போட்டியின் அவர் செய்த செயல் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக உள்ளது.
இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "அர்ஷ்தீப் சிங் ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.9-ஐ மீறியுள்ளார். சர்வதேசப் போட்டியின் போது பந்தை அல்லது கிரிக்கெட் உபகரணங்களை மற்ற வீரர் மீது ஆபத்தான அல்லது முறையற்ற வகையில் வீசுவது விதிமுறை மீறலாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமீறலுக்காக அர்ஷ்தீப் சிங்கிற்கு அவரது போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன், அவரது ஒழுக்கமுறைப் பதிவில் ஒரு 'டிமெரிட்' (Demerit) புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் அர்ஷ்தீப் சிங் செய்யும் முதல் தவறு இதுவாகும். ஐசிசி போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் முன்மொழிந்த இந்தத் தண்டனையை அர்ஷ்தீப் சிங் ஒப்புக்கொண்டதால், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் எழவில்லை.