சென்னை: 2026 டி20 உலககோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில், இந்தியா தனது இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை இன்று வியாழக்கிழமை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. அரையிறுதி வாய்ப்பைப் தக்கவைத்துக் கொள்ள இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி மிக முக்கியமானது.
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவும் ஜிம்பாப்வேயும் தோல்வியைத் தழுவின. தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய அணி தோற்றது. அதேவேளையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி மும்பை வான்கடே மைதானத்தில் ஜிம்பாப்வேயை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் இந்தியாவுக்கு ராசி இல்லாத மைதானம் என்று ரசிகரிகள் சாடியுள்ள நிலையில், சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இந்தியாவின் இருபது ஓவர் சர்வதேச போட்டியில் எவ்வளவு வென்று இருக்கிறது என்று தற்போது காணலாம். இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது.

இங்கு இந்தியா விளையாடிய முதல் இருபது ஓவர் சர்வதேசப் போட்டி, 2012 செப்டம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்தது. அந்த பரபரப்பான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து, பிரண்டன் மெக்கல்லம் 55 பந்துகளில் 91 ரன்கள் விளாச, 167 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 41 பந்துகளில் 70 ரன்கள் குவித்த போதிலும், இந்திய அணி 166 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது.
இரண்டாவது இருபது ஓவர் சர்வதேசப் போட்டி 2018 நவம்பரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா கடைசிப் பந்தில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து, நிகோலஸ் பூரன் 25 பந்துகளில் 53 ரன்கள் குவிக்க, 181 ரன்களைப் பதிவு செய்தது. இலக்கை விரட்டிய இந்திய அணியில் ஷிகர் தவான் 62 பந்துகளில் 92 ரன்களும், ரிஷப் பந்த் 38 பந்துகளில் 58 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி விளையாடிய சமீபத்திய இருபது ஓவர் சர்வதேச போட்டி, 2025 ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்தது. இப்போட்டியில் முதலில் பந்துவீசிய இந்தியா, இங்கிலாந்து அணியை 165 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை துரத்திய இந்திய அணியில், இடது கை ஆட்டக்காரரான திலக் வர்மா 55 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுத்து, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 2026 இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளில், இந்தியா-ஜிம்பாப்வே மோதலுக்கு முன்னதாக எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஆறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
முதல் குரூப் போட்டியில் நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பகல் வேளையில் நடந்த இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் 182 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. இந்த மைதானத்தில் நடந்த பிற போட்டிகளில், நியூசிலாந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

அமெரிக்கா நெதர்லாந்தை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணி கனடாவுக்கு எதிராக 200 ரன்கள் குவித்து, பிறகு கனடாவை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி ரன் ரேட்டை உயர்த்த வெண்டும் என்றால், 250 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும். அதற்கு இந்த மைதானத்தில் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.