பார்படாஸ்: இந்தியா தனது சூப்பர் 8 சுற்றை சரிவுடன் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
சூப்பர் எட்டு சுற்றில் நேற்று முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைச் சந்தித்தது இந்தியா. டாஸ் வென்ற கேப்டன் டோணி பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேயாட்டம் ஆடி ரன்களைக் குவித்தனர். வார்னரும், வாட்சனும் இணைந்து இந்திய பந்து வீச்சாளர்களைப் பதம் பார்க்கவே ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 104 ரன்களைக் குவித்தனர்.
வார்னர் அதிரடியாக ஆடி 72 ரன்கள் குவித்தார். வாட்சன் தன் பங்குக்கு 54 ரன்கள் குவித்தார்.
பின்னர் வந்த டேவிட் ஹஸ்ஸி 22 பந்துகளில் 35 ரன்களைக் குவித்து வெளியேறினார். இறுதியில், 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியா 184 ரன்களைக் குவித்தது.
கடினமான வெற்றி இலக்குடன் களம்இறங்கிய இந்தியா எடுத்த எடுப்பிலிருந்தே தட்டுத்தடுமாறியது. முரளி விஜய், கெளதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், டோணி, யூசுப் பதான் ஆகிய முக்கிய வீரர்கள் அனைவரும் சிங்கிள் டிஜிட்டில் வெளியேறினர்.
ரோஹித் சர்மா மட்டும் அட்டகாசமாக ஆடி 79 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குத் துணையாக ஒரு வீரர் கூட நிற்க முடியாமல் போனதால் இந்தியாவால் சுத்தமாக எழுந்திருக்க முடியவில்லை. 100 ரன்களையாவது இந்தியா எடுக்குமா என்ற அவல நிலையில் ஒரு கட்டத்தில் இருந்தது.
17.4 ஓவர்களிலேயே இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 135 ரன்களை மட்டுமே எடுத்து 49 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்தியா.