துபாய்: மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் பேட்டிங் செய்யும்போது காயம் அடைந்தார். இதனால் அவர் போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற நேர்காணலில் அவர் பங்கேற்கவில்லை.
மகளிர் டி20 உலக கோப்பையை இந்தியா இம்முறை கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நேர்மாறாக விளையாடிய முதல் போட்டியிலே நியூசிலாந்திடம் 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 106 ரன்கள் என்ற இலக்கை இந்திய மகளிர் அணி துரத்தியது.

அப்போது வெற்றியின் அருகே இந்திய மகளிர் அணி வந்தபோது ஆட்டத்தின் 18 புள்ளி 4வது ஓவரில் ஹர்மன்பிரீத் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. ஓயிடாக வந்த பந்தை அடிக்க முற்பட்டபோது அது விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால் அதை விக்கெட் கீப்பர் சரியாக பிடிக்கவில்லை. எனினும் திரும்ப கிரீஸ்க்குள் வரவேண்டும் என்ற முயற்சியில் ஹர்மன்பிரீத் ஈடுபட்டபோது அவர் தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு கழுத்தில் வலி ஏற்பட்டது. இதனை அடுத்து கழுத்தை பிடித்தவாறு 29 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர் ஹர்ட் ஆனார். ஆனால் இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியிலும் ஹர்மன்பிரீத் கவுர் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக ஸ்மிருதி மந்தனா வந்து பேசினார்.அப்போது, ஹர்மன்பிரீத்தின் காயம் குறித்து ஏதும் எங்களால் சொல்ல முடியாது. மருத்துவக் குழு தற்போது அவரை சோதித்து வருகிறது.
அதன் பிறகு தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.இந்த போட்டி குறித்து பேசிய மந்தனா, இன்றைய ஆட்டத்தில் எங்களுடைய திட்டத்தை நாங்கள் சரியான முறையில் பின்பற்றினோம். நாங்கள் ரன் ரேட் குறித்து கவலைப்படவில்லை. வேகமாக ரன்கள் அடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தால் விக்கெட்டுகள் விழ வாய்ப்பு இருக்கிறது. இதனால் நாங்கள் முழு கவனத்துடன் கணக்கிட்டு தான் எங்களுடைய இன்னிங்ஸை கட்டமைத்தோம.
அடுத்த போட்டி இலங்கைக்கு எதிரானது அவர்களை விட ரன் ரேட்டில் நாங்கள் அதிகம் இருக்கிறோம். எனினும் இலங்கை சமீப காலமாக நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான பெற்ற வெற்றி எங்களுடைய உத்வேகத்தை அதிகரித்திருக்கிறது என்று ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார்.