செயின்ட்லூசியா : சுரேஷ் ரெய்னாவின் அபார சதத்தால் 14 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.
செயின்ட் லூசியாவில் நேற்று நடந்த 3வது உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டியில், தென்ஆப்பிரிக்காவை சந்தித்தது இந்தியா. முதலில் பேட் செய்த இந்தியா தொடக்க வீரர்களான முரளி விஜயையும், திணேஷ் கார்த்திக்கையும் அடுத்தடுத்து இழந்தது.
இந்த நிலையில், ரெய்னாவும், யுவராஜ் சிங்கும் இணைந்தனர். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர். இருவரும் இணைந்து 88 ரனக்ளைச் சேர்த்து இந்தியாவின் ஸ்கோரை வலுப்படுத்தியதோடு, தென் ஆப்பிரிக்காவின் ஆதிக்கத்தையும் தகர்த்தனர்.
யுவராஜ் சிங் 30 பந்துகளில் 37 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடி 101 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டிகளில் சதம் போட்ட 3வது வீரர் என்ற பெயரையும் பெற்றார் ரெய்னா. அதேசமயம், முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனையும் படைத்தார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 186 ரன்களைக் குவித்தது இந்தியா.
பின்னர் ஆடத் தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு கல்லிஸ் சற்று நம்பிக்கை தரும் வகையில் ஆடினார். சிறப்பாக ஆடிய அவர் 73 ரன்களைக் குவித்தார். கேப்டன் ஸ்மித் 36 ரன்களைக் குவித்தார். டிவில்லியர்ஸின் பங்கு 31.
ஆல்பி மார்கல் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யூசுப் பதானும், ஆசிஷ் நெஹ்ராவும் சிறப்பாக பந்து வீசினர். பதானுக்கு 2 விக்கெட்கள் கிடைத்தன. நெஹ்ரா ஒரு விக்கெட் எடுத்தார். இந்தியப் பந்து வீச்சு நேர்த்தியாக இருந்ததால், தென் ஆப்பிரிக்கா விரைவில் விக்கெட்களை இழந்து தடுமாறியது.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 172 ரன்களை மட்டுமே தென் ஆப்பிரிக்காவால் எடுக்க முடிந்தது.
ஏற்கனவே ஆப்கானிஸ்தானை வென்றுள்ள இந்தியா, நேற்றைய வெற்றியின் மூலம் சூப்பர் எட்டு சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணி இந்தியாதான்.