பாகிஸ்தானை இந்தியா வீழ்த்துவது கஷ்டம்தான்.. கவாஸ்கர் ஆரூடம்
கொல்கத்தா: உலகக் கோப்பை டி 20 போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவை, நியூசிலாந்து வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இதனால் இந்தியாவுக்குப் பெரும் சிக்கலாகி விட்டது. மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தால் இந்தியா தொடரை விட்டே வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டு விடும்.
இந்த நிலையில் நாளை தனது பரம வைரியான பாகிஸ்தானுடன் மோதவுள்ளது இந்தியா. கொல்கத்தாவில் இப்போட்டி நடைபெறவுள்ளது. ஆனால் இந்தியா இதில் வெல்லும் வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

கடும் நெருக்கடி
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், நியூசிலாந்திடம் அடைந்த தோல்வியால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி உள்ளது. நாளைய போட்டியில் பாகிஸ்தானின் கையே ஓங்கியிருப்பதாக நான் கருதுகிறேன்.

பாக். பவுலிங் அபாயகரமானது
இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்பது இந்தியாவின் பேட்டிங் மற்றும் பாகிஸ்தானின் பவுலி்ங்குக்கு இடையிலான மோதலாகவே இருக்கும். பாகிஸ்தான் பந்து வீச்சு அபாயகரமானது, சமாளிப்பது கடினமானது.

பார்க்க நன்றாக இருக்கும்
இந்தியாவின் பேட்டிங்கும், பாகிஸ்தானின் பந்து வீச்சும் மோதுவதைப் பார்ப்பது வித்தியாசமானது, குதூகலமானது. இருப்பினும் இந்தியப் பந்து வீச்சாளர்களும் சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பதை பாகிஸ்தான் மறந்து விடக் கூடாது.

அஸ்வின் இருக்கிறார்
அஸ்வின் இருக்கிறார், நேஹ்ரா இருக்கிறார். ஜஸ்பிரீத் பும்ரா இருக்கிறார். அஸ்வின் சிறப்பான ஸ்பின்னர். எனவே பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு சற்றும் சளைக்காத பவுலர்கள் நம்மிடமும் உள்ளனர்.

ஆமிரிடம் கவனம் தேவை
ஆசியக் கோப்பைப் போட்டியின்போது பாகிஸ்தான் பந்து வீச்சாளர் முகம்மது ஆமிரிடம் இந்திய வீரர்கள் திணறினர். இப்போது அவரை எப்படி சந்திக்க வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன் என்றார் கவாஸ்கர்.

வித்தியாசமான வரலாறு
உலகக் கோப்பைப் போட்டிகளைப் பொறுத்தவரை இதுவரை பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதே இல்லை. அதேசமயம், கொல்கத்தாவில் இந்தியாவுக்கு எதிராக நடந்த போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் தோற்றதே இல்லை என்பதும் சுவாரஸ்யமான ஒரு வரலாறு!


Click it and Unblock the Notifications