கொல்கத்தாவில் கொட்டுகிறது மழை.. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி அம்பேல்?
கொல்கத்தா: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடுவே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தி்ல உலக கோப்பை டி20 சூப்பர்-10 சுற்று போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், அங்கு கனத்த மழை பெய்து வருகிறது.
இன்று காலை 6 மணியளவில் மேகமூட்டம் அதிகரித்த நிலையில், 9 மணி முதல் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் நல்ல மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன்பிறகு சூரியன் மெல்ல தலை காட்டினாலும், பிறகு மேக மூட்டமாகவே இருந்தது.
மாலையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் பிட்ச் உள்ள பகுதி முழுக்க மூடப்பட்டுள்ளது. ரசிகர்கள் குடைபிடித்தபடி மைதானத்தில் வெளியே காத்திருக்கிறார்கள். மேக மூட்டம் அதிகமாக இருப்பதால், மழை ஓய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

வசதி இல்லை
எனவே இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்று ரசிகர்கள் அச்சப்படுகிறார்கள். கொல்கத்தா மைதானத்தில் மழை நீரை வெளியேற்ற முன்பு போதிய வசதிகள் செய்யப்படவில்லை.

நவீன வசதிகள்
தற்போது நவீன வசதிகள் பலவும் செய்யப்பட்டுள்ளன. எனவே மழை பெய்தாலும் ஓவர்களை குறைத்து, போட்டியை நடத்திவிடலாம் என்று மைதான பராமரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புள்ளிகள்
இப்போட்டி மழையால் கைவிடப்படும்பட்சத்தில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். பாகிஸ்தான் ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளதால், இப்போட்டி ரத்தானாலும் அந்த அணிக்கு பெரிய பாதிப்பு இல்லை.

இந்தியாவுக்கு பின்னடைவு
இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றுள்ளது. எனவே இப்போட்டியில் வென்றேயாக வேண்டிய கட்டாயம் உள்ளது. மழையால் 1 புள்ளிதான் கிடைத்தால் அது இந்திய அணிக்கு பின்னடைவுதான். எனவே மழை இடையூறு இன்றி போட்டி நடைபெற்றாக வேண்டும் என இந்திய ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

பந்து வீச்சு
மழை காரணமாக பிட்சில் ஈரப்பதம் உருவாகியுள்ளது. இது பந்துகளை ஸ்விங் செய்ய உதவும் என்கிறார் கள பராமரிப்பாளர். எனவே பந்து வீச்சு நன்கு எடுபடும் என்பது கணிப்பாக உள்ளது.

பாதுகாப்பு
தர்மசாலாவில் நடைபெற இருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி, பாதுகாப்பு காரணங்களால், கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், மழை அச்சுறுத்தல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications