“தயவு செய்து ஐபிஎல்-ல் விளையாடாதீங்க”.. இந்திய வீரர்கள் மீது கபில் தேவ் கடும் விளாசல்.. காரணம் என்ன?
மும்பை: இந்திய அணி வீரர்கள் காயம் காரணமாக விலகுவது குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.
இதற்கான இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

வீரர்கள் விலகல்
டி20 உலகக்கோப்பை தொடருக்காக பல்வேறு தொடர்களில் ஓய்வில் இருந்த இந்த வீரர்கள் கடைசி நேரத்தில் ஏமாற்றியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மாற்று வீரர்களாக பார்க்கப்படும் முகமது ஷமி மற்றும் தீபக் சஹார் ஆகியோரும் முழு உடற்தகுதி பெறாமல் உள்ளனர். இதனால் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் பவுலிங்கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

குவியும் விமர்சனங்கள்
இதற்கெல்லாம் ஐபிஎல் தான் காரணம் என ரசிகர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். பணத்திற்காக ஐபிஎல் தொடரில் எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும் விளையாடும் வீரர்கள், தேசத்திற்காக என்று வரும்போது சிறு காயம் ஏற்பட்டால் கூட விலகி விடுகின்றனர். இது எந்த அளவிற்கு நியாயமான ஒன்று எனக்கூறி வருகின்றனர்.

கபில் தேவ் விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து கபில் தேவ் விளாசியுள்ளார். அதில், நான் லட்சியத்துடனும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் விளையாடினேன். ஆனால் இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு அதிகப்படியான அழுத்தம் ஏற்படுகிறது, சமாளிக்க முடியவில்லை என புலம்புகின்றனர். அழுத்தத்துடன் விளையாடுவதாக இருந்தால் தயவு செய்து விளையாடாதீர்கள், விட்டுவிடுங்கள்.

அதை செய்யுங்கள்
எந்த செயலை செய்தாலும் மகிழ்ச்சியுடனும், அர்ப்பணிப்புடனும் செய்தால் அழுத்தம் ஏற்படாது. எனவே எது மகிழ்ச்சியாக உள்ளதோ அதை மட்டும் செய்யுங்கள். பணம் எவ்வளவு கொடுத்தாலும், அழுத்தம் தரக்கூடிய போட்டிகளில் விளையாட வேண்டிய அவசியம் இல்லை என கபில் தேவ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications