“எனக்காக கோலி அங்கிருந்தார்”.. வங்கதேச போட்டிக்கு முன் நடந்த சம்பவம்..கே.எல்.ராகுல் சுவாரஸ்ய தகவல்!
அடிலெய்ட்: வங்கதேசத்துடனான போட்டியில் சிறப்பாக ஆடுவதற்கு விராட் கோலி தான் மறைமுக காரணம் என கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 184/6 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய வங்கதேசத்திற்கு மழையின் காரணமாக 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 145 ரன்களை மட்டுமே எடுத்து வங்கதேசம் தோற்றது,.

ராகுலின் ஆட்டம்
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது கே.எல்.ராகுல் தான் எனக் கூறலாம். முதல் 3 போட்டிகளில் மோசமாக சொதப்பிய கே.எல்.ராகுல் நேற்று விமர்சனங்களுக்கு மத்தியில் அரைசதம் விளாசினார். 22 பந்துகளை சந்தித்த கே.எல்.ராகுல் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 50 ரன்களை விளாசினார். இதே போல வங்கதேசம் 68 ரன்கள் வரை ஒரு விக்கெட் கூட இழக்காமல் இருந்த சூழலில் ராகுலின் ரன் அவுட் தான் திருப்புமுனையை தந்தது.

கே.எல்.ராகுல் விளக்கம்
இந்நிலையில் தனது கம்பேக் குறித்து கே.எல்.ராகுல் பேசினார். ஆஸ்திரேலிய களத்தில் வழக்கமாக உள்ள தன்மை தற்போது இல்லை. இதற்கு முன்பு இங்கு டெஸ்ட் கிரிக்கெட் ஆடியுள்ளோம். ஆனால் இப்போது முற்றிலும் மாறி உள்ளதால் அதனை ஏற்பதில் சற்று சிரமம் இருந்தது. எனவே எங்களின் மனநிலையை மாற்றுவதற்காக நானும் விராட் கோலியும் தொடர்ந்து கலந்து ஆலோசித்தோம்.

கோலியின் அட்வைஸ்
மிடில் ஓவர்களில் விளையாடும் போதும், எப்படி செயல்பட வேண்டும் என விராட் கோலி எனக்கு கூறினார். களத்தின் நடுவேயும் எனக்கு விராட் கோலி அறிவுரை கூறுவார். இதே போல கோலிக்கும் நான் கூறுவேன். வங்கதேச போட்டிக்கு முன்னதாக பேட்டிங்கில் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டோம். எனக்காக அவர் உறுதுணையாக இருந்தார்.

அடுத்த போட்டி
முந்தைய போட்டிகளில் ஃபீல்டிங் மற்றும் கே.எல்.ராகுலின் ஓப்பனிங் தான் பிரச்சினையாக இருந்தது. தற்போது அவை இரண்டுமே சரியாகிவிட்டதால் இந்திய அணி நல்ல பலத்துடன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக வரும் ஞாயிறு அன்று ஜிம்பாப்வே அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி மெல்பேர்னில் நடைபெறவிருக்கிறது.


Click it and Unblock the Notifications