கண்டத்தில் சிக்கிய நியூசி,.. டாஸில் வெற்றி பெற்ற போதும் ஒரு சிக்கல்.. சைலண்டாக காய் நகர்த்திய பாபர்!
சிட்னி: டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்ற போதும் அவர்களின் முடிவு பாகிஸ்தானுக்கு தான் சாதகமாக அமைந்துள்ளது.
ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இரு அணிகளும் மோதும் இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தற்போதைய நிலைமையை வைத்து வில்லியம்சன் போட்ட ப்ளான் சரி தான். ஆனால் அது பாகிஸ்தானுக்கும் சாதகமான ஒன்று தான்.

முடிவுக்கான காரணம்
சிட்னி மைதானத்தின் பிட்ச் மிகவும் வறண்டு உள்ளது என்பதால் பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருக்கும். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்விங் பெரியளவில் இருக்காது என்பதால் பேட்ஸ்மேன்கள் பந்தை நன்கு கணித்து சிக்ஸர் விளாச முடியும். எனவே இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி தான் அதிக இலக்கை வைத்து அதிகமுறை வெற்றி கண்டுள்ளது.

நியூசிலாந்துக்கு சாதகம்
நியூசிலாந்துக்கும் இது நல்லது தான். ஏனென்றால் நடப்பு தொடரின் லீக் சுற்றில் அந்த அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த மூன்று வெற்றிகளுமே முதலில் பேட்டிங் செய்து கிடைத்தவை தான். அதுவும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிகளை பெற்றுள்ளன. அதே ட்ராக்கில் செல்ல வேண்டும் என்று தான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆனால் இதே தான் அந்த அணிக்கு பாதகமும் ஆகும்.

என்ன காரணம்?
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 1992, 1999, 2007ம் ஆண்டுகள் என இதுவரை 3 முறை பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப்போட்டிகளில் மோதியுள்ளன. இந்த மூன்றிலுமே பாகிஸ்தான் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. அதுவும் நியூசிலாந்து அணி டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்து தோல்வியடைந்துள்ளன.

பாபரின் நிலைப்பாடு
இதன்படி பார்த்தால் அரையிறுதியில் நியூசிலாந்து பேட்டிங் செய்தால் பாகிஸ்தானுக்கு சாதகமாக தான் வரலாறு உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில் பாகிஸ்தான் எதிர்பார்த்த முடிவினை நியூசிலாந்து எடுத்துள்ளது. எனவே இன்று வரலாறு நீடிக்குமா, அல்லது வரலாறு மாற்றி எழுதப்படுமா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications